யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மகாராஷ்ட்ரா மாநிலம் முன்னிலை உள்ளது உண்மை தான். ஆனால் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கியே உள்ளது.
பரவிய செய்தி
’தமிழ்நாட்டைப் போல மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களும் கொரோணா தொற்று காரணமாக பொருளாதார ரீதியான பாதிப்படைந்தது. ஆனால், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP), பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டை விட அதிகமானதாக இருக்கிறது’ - தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா.
விரிவான விளக்கம்
கடந்த ஜூன் 20ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, ‘தமிழ்நாட்டைப் போல மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களும் கொரோணா தொற்று காரணமாக பொருளாதார ரீதியான பாதிப்படைந்தது. ஆனால், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் (GSDP), பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை விட முன்னேறியதாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
உண்மை என்ன?
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் பற்றி இணையத்தில் தேடியபோது இந்த மாநிலங்களின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை விவரங்களைக் காணமுடிந்தது. இந்தத் விவரங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் அரசுகள் 2025-26 ஆண்டிற்கான சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கைகளில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.
முதலில், இந்தியாவிலே மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (GSDP) கொண்டிருக்கிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 49.39 லட்சம் கோடியாகும். அடுத்த இடத்தில் தமிழ்நாடு தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 35.67 லட்சம் கோடியாகும். குஜராத் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 29.82 லட்சம் கோடியாகும். அதாவது, தமிழ்நாட்டைவிட குஜராத் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) குறைவானது தான்.

அதே நேரத்தில் முந்தைய நிதியாண்டான 2024-25-ல் இருந்து 2025-26 நிதியாண்டில் இந்த மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு பார்க்கும் போது தமிழ்நாடு தான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (Growth rate of GSDP) 15 சதவீதமாகும். இதில் மகாராஷ்டிரா 9 சதவீதமாகவும், குஜராத் 12 சதவீதமாகவும் தமிழ்நாட்டை விட பின்தங்கியே உள்ளன.

அதேபோல், தொடர்ந்து கடந்த இரண்டு நிதியாண்டுகளாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் (Double Digit) உள்ளது. 2024-25 நிதியாண்டில் 11. 19 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தமிழ்நாடு இந்தியாவிலே முதலிடத்தில் இருந்தது. 2025-26 நிதியாண்டிலும் 10.83 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.

இதிலிருந்து, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) தமிழ்நாட்டை விட மகாராஷ்ட்ரா மாநிலம் முன்னிலையில் உள்ளது என்பதும் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கியே உள்ளது என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மகாராஷ்ட்ரா மாநிலம் முன்னிலை உள்ளது உண்மை தான். ஆனால் GSDP-ல் குஜராத் மாநிலமும் தமிழ்நாட்டை விட முன்னிலையில் உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா சொல்வது தவறான தகவாகும்.