யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘பீட்ஸா விற்ற பள்ளி நண்பனை கேலி செய்து பரப்பப்பட்ட வீடியோவிற்கு இணையத்தில் குவியும் ஆதரவு’ என News Tamil 24x7, Tamil Nadu Times, Polimer News ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி, உண்மையாக நடந்த சம்பவம் அல்ல. சித்தரிக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
எந்த வேலையும் கேவலம் இல்லங்க
பல வருடங்கள் கழித்து சந்தித்த பள்ளித்தோழன் பீட்சா டெலிவரி ஊழியராக பணியாற்றுவதை அவமரியாதையாக பேசி கிண்டல் செய்யும் பள்ளித்தோழியின் வீடியோ இணையத்தில் வைரல்
“அப்போ School-ல எங்கள Motivate பண்ணுவ.. இப்போ பீட்சா டெலிவரி வேலை செய்றியா. இந்த வீடியோவ நம்ம Friends எல்லாருக்கும் அனுப்புறேன்” என அவர் பேசுகிறார்
இத்தனை கிண்டலுக்கு உள்ளாகியும் பொறுமையுடன் சிரித்தபடி தோழிக்கு பதிலளிக்கும் பள்ளித்தோழரின் வீடியோ காண்போரை கண்கலங்க செய்கிறது.

விரிவான விளக்கம்
பல வருடங்கள் கழித்து சந்தித்த பள்ளித்தோழன் பீட்சா டெலிவரி ஊழியராக பணியாற்றுவதை பள்ளித்தோழி அவமரியாதையாக பேசியதாக News Tamil 24x7, Tamil Nadu Times, Polimer News போன்ற ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் நண்பனை பார்த்து, பள்ளியில் எல்லோரையும் ஊக்குவித்த நீ, இன்று டெலிவரி ஊழியரா என அவமானப்படுத்துவதாகவும், இதை அந்த இளைஞர் அழகாக தனது புன்னகையால் கடந்து செல்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவமானத்தை சிரிப்பால் வென்ற இளைஞர் VIDEO
பாட்னாவில் பள்ளி பருவ நண்பன் பீட்சா டெலிவரி செய்வதை கண்ட தோழி, வீடியோ எடுத்து கேலி செய்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. நண்பனை பார்த்து, பள்ளியில் எல்லோரையும் ஊக்குவித்த நீ, இன்று டெலிவரி ஊழியரா என அவமானப்படுத்துகிறார். இதை, அந்த இளைஞர்… pic.twitter.com/GzOcFDvU6I
பீட்ஸா விற்ற பள்ளி நண்பனை கேலி செய்த பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..! இளைஞருக்கு குவியும் ஆதரவு#deliveryboy | #schoolfriend | #viralvideo | #PolimerNews pic.twitter.com/7tWyydp5Sq
உண்மை என்ன?
முதலில் ஊடகங்களில் வெளியான வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். ri_shika3317 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 27, 2026 அன்று ”Disclaimer :- Just an act” என்று குறிப்பிட்டு அந்த வீடியோ வெளியாகியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து ri_shika3317 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 29 அன்று மற்றொரு வீடியோ வெளியிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் வைரலான வீடியோவில் உள்ள பெண் பேசும் போது, நாங்கள் நால்வரும் நண்பர்கள் என்றும், பர்கர் கிங்கிலிருந்து வெளியே வரும் போது இந்த வீடியோவை உருவாக்கியதாகவும், வேடிக்கைக்காக மட்டுமே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
இதையடுத்து அந்த வீடியோ உள்ள இளைஞர் பேசும் போது, இந்த வீடியோ முற்றிலும் பொழுதுப்போக்குக்காக உருவாக்கப்பட்டது என்றும், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்றும் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், தனது பெயரைப் பயன்படுத்தி பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பணம் கேட்டதாகவும், அதனால் தான் நிலைமையை தெளிவுப்படுத்த நினைத்ததாகவும், இந்த வீடியோ அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
கூடுதலாக singhtarun000 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வைரல் வீடியோவில் இருந்த இளைஞர், இது தெளிவுபடுத்தும் மற்றொரு வீடியோவையும் பார்க்கமுடிந்தது. அதில் பார்வையாளர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் அவர், வைரலான வீடியோ முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு பொழுதுபோக்குக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் கூறுகிறார். மேலும் தனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பணம் பரிப்பதாகவும், இது போன்ற எந்த கணக்குகளுக்கும் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் மக்களை வலியுறுத்துவதாகவும் கூறினார். மேலும் நடிப்பு மற்றும் பாடுவதை தான் விரும்புவதாகவும், இந்த வீடியோவுக்கு நிஜ வாழ்க்கை சம்பவங்களுடன் எந்த தொடர்புமில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், ‘பீட்ஸா விற்ற பள்ளி நண்பனை கேலி செய்து பரப்பப்பட்ட வீடியோவிற்கு இணையத்தில் குவியும் ஆதரவு’ என News Tamil 24x7, Tamil Nadu Times, Polimer News ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி, உண்மையாக நடந்த சம்பவம் அல்ல. சித்தரிக்கப்பட்ட வீடியோ இது. இதை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.