யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் மது பாட்டில் இருந்ததாக பரப்பப்படும் புகைப்படம் போலியானவை. உண்மையான புகைப்படத்தில் வேர்க்கடலை பாக்கெட் இடம்பெற்றிருந்த இடத்திலேயே மது பாட்டில் போலியாக எடிட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில், திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு நடைபெற்றது. துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணியின் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான இளைஞரணி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்க வந்த தொண்டர்களுக்காக அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையில் மதுபானம் இடம்பெற்றிருந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு Chair லயும் Old Monk Bottle 😂@Arivalayam pic.twitter.com/nNxI7awODo
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூர்த்து கவனித்தால், அதில் திமுக இளைஞர் அணி என்று எழுதப்பட்ட எழுத்துக்கள் சிதைந்திருந்தை பார்க்கமுடிந்தது. அதே போல் மதுபான பாட்டில்கள் இருப்பதற்கு கீழே வேறு ஏதோ உணவு பொருட்கள் இருப்பதையும் பார்க்கமுடிந்தது.

இதையடுத்து திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு பொருட்கள் என்ன என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது Behindwoods ஊடகம் “DMK தந்த Bag-ல் இவ்ளோ இருக்கா.. மிச்சர் முதல் கார பொறி வரை..! 1.30+ லட்சம் பேருக்கு CM தந்த Surprise” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் கார பொரி, வாட்டர் பாட்டில், முந்திரி பருப்பு, மிக்சர், இனிப்பு போன்ற உணவு பொருட்கள் இடம்பெற்றிருந்தன என்று குறிப்பிட்டுருந்தனர்.
மேலும் புதியதலைமுறை ஊடகத்தில், “களைகட்டிய திமுக இளைஞர் அணி கூட்டம் - என்னென்ன Snacks தெரியுமா ?” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், திமுக இளைஞர் அணி மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பின் புகைப்படம் காட்சியாக இடம்பெற்றிருந்தது. அதில் எங்கும் மது வகைகள் இடம்பெற்றிருக்கவில்லை.
அதே போல் திமுக கரூர் மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி தெற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் சுகுணா செந்தில்குமார் என்பவர், திமுக கூட்டத்தில் பங்கேற்கும் 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தண்ணீர், ஜூஸ், நொறுக்கு தீனிகள் இது என்று குறிப்பிட்டு, வைரல் புகைப்படத்தின் உண்மையான படத்தை பகிர்ந்திருந்தார். அதில், திமுக இளைஞர் அணி என்கிற வாசகங்களும் தெளிவாக இடம்பெற்றிருந்தது. அந்த புகைப்படத்தில் வேர்க்கடலை பாக்கெட் இடம்பெற்றிருந்த இடத்தில் தான் மது பாட்டிலை போலியாக எடிட் செய்து இணைக்கப்பட்டிருப்பதும் உறுதியானது.
திமுக கூட்டத்தில் பங்கேற்கும் 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தண்ணீர், ஜூஸ், நொறுக்கு தீனிகள் இது #திமுகா 🔥🖤❤️
M. K. Stalin
Udhayanidhi Stalin #DMKITWING 🏴🚩#youth4dmk2026 pic.twitter.com/UkZ2BcaLL7
முடிவு:
எனவே, திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் மது பாட்டில் இருந்ததாக பரப்பப்படும் புகைப்படம் போலியானவை. உண்மையான புகைப்படத்தில் வேர்க்கடலை பாக்கெட் இடம்பெற்றிருந்த இடத்திலேயே மது பாட்டில் போலியாக எடிட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
