யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை என்பது உறுதியானது. இதை ராகுல் காந்தியின் பேரணி என்று கூறி தவறாக பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
ராகுல் காந்தி வரலாற்றை எழுதியுள்ளார். ராகுல் காந்தி அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டார் என்று கோடி மீடீயா ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.

விரிவான விளக்கம்
தேர்தல் ஆணையம், ஆளும் பாஜக அரசுடன் சேர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததாகவும் கூறி வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் பீகாரில் ராகுல்காந்தி வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ராகுல்காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு கூட்டமாக மக்கள் திரண்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
ராகுல் காந்தி வரலாற்றை எழுதியுள்ளார். ராகுல் காந்தி அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டார் என்று கோடி மீடீயா ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.#VoteAdhikarYatra pic.twitter.com/mtd1l0fcY4
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது king_boy_sada ஜூன் 7ஆம் தேதி, பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை என்று குறிப்பிட்டு பரவி வரும் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
அதே போல் ecity mirror என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜூலை 5ஆம் தேதி இதே வீடியோ பதிவாகியிருந்தது. அதில் ரத யாத்திரை இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரும்பப்படும் விழாக்களில் ஒன்று என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஓடிசா மாநிலத்தின் பூரிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த இரண்டு பக்கங்களிலும் ராகுல் காந்தி பேரணி தொடங்கியதற்கு முன்பே, இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளதை உறுதி செய்யமுடிந்தது.
இதை மேலும் உறுதி செய்ய தேடிய போது, ND TV ஊடகப் பக்கத்தில் ஜெகநாதரின் ரத யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர் என்று பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படங்கள் இருந்ததை பார்க்கமுடிந்தது.

இதையடுத்து GOOGLE MAP-ல் பூரி ஜெகந்நாதர் கோயில் குறித்து தேடினோம். அப்போது ஜூலை 2022ல் ரத யாத்திரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அதில் பதிவிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படமும், பரவி வரும் வீடியோ காட்சிகளும் ஒன்றாக இருப்பதை உறுதிசெய்ய முடிந்தது.

முடிவு:
நம் தேடலில், பரவி வரும் வீடியோ பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை என்பது உறுதியானது. இதை ராகுல் காந்தியின் பேரணி என்று கூறி தவறாக பரப்பி வருகின்றனர்.