யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாஜக ஆளும் வட மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட பல மடங்கு அதிக போதைப் பொருட்கள் புழக்கமிருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் சொல்கிறது.
பரவிய செய்தி
'‘போதைப் பொருள் ஒழிப்பு பற்றி முதல்வர் எங்கும் பேசவில்லை. கஞ்சா, மெத்தபெட்டமைன், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடே மோசமான நிலையில் உள்ளது’' - தமிழ்நாடு பாஜக தலைவர், நயினார் நாகேந்திரன்.
விரிவான விளக்கம்
கடந்த ஜனவரி 29 அன்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘போதைப் பொருள் ஒழிப்பு பற்றி முதல்வர் எங்கும் பேசவில்லை. கஞ்சா, மெத்தபெட்டமைன், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடே மோசமான நிலையில் உள்ளது’ என்று பேசியுள்ளார்.
உண்மை என்ன?
போதைப் பொருள் ஒழிப்பு பற்றி முதல்வர் பேசியிருக்கிறாரா என்று முதலில் தேடினோம். ’தினமலர்’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதன்படி, 2023 ஆகஸ்ட் மாதம் சென்னையில் தமிழ்நாடு போலீஸ் சார்பாக நடத்தப்பட்ட ’போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

அதில், ’மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் எதிர்காலத்தை இழக்கின்றனர். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் ’போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 02 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நடைபயணத்தை தொடங்கிவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ’போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
இதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் போதைப்பொருள் ஒழிப்பு பற்றி பேசிவந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
அடுத்ததாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதை பொருள் வழக்குகள் பற்றிய மாநிலவாரியான தரவுகளை தேடினோம். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) 2023ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, 2023ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 66,381 சம்பவங்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 8,943 குற்றச் சம்பவங்களுடன் 14வது இடத்தில் உள்ளது தெரியவருகிறது.

மேலும், 2024 ஆண்டில் இந்தியாவில் போதைப்பொருட்கள் புழக்கம் இருப்பது பற்றி இந்திய அரசு மாநிலவாரியான தரவுகளைக் கொண்டு பார்க்கும் போது, தமிழ்நாட்டில் அபின், மார்பின் போன்ற போதைப்பொருட்கள் இல்லை என்பது தெரியவருகிறது. ஆனால் ராஜஸ்தான், பஞ்சாப், உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் அபின் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது; மகாராஷ்டராவில் மார்பின் மிக அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது என்பதையெல்லாம் அறிய முடிகிறது.

அதேபோல், 2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக போதைப்பொருட்கள் காரணமாக மாநிலவாரியாக பதிவான வழக்குகளை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் 481 என்ற அளவில் இருக்கிறது. ஆனால் கேரளாவில் 27701 வழக்குகளும், மகாராஷ்ட்ராவில் 14553 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 6204 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து பார்கையில், பாஜக ஆளும் வட மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட பல மடங்கு அதிக போதைப் பொருட்கள் புழக்கமிருப்பது நிரூபணமாகிறது.
முடிவு:
’போதைப் பொருள் ஒழிப்பு பற்றி முதல்வர் எங்கும் பேசவில்லை’ என்றும் ’போதை பழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு மோசமான நிலையில் உள்ளதாகவும்’ நயினார் நாகேந்திரன் தவறான தகவலை பரப்பி வருகிறார்.