யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பணம் செலுத்தி தங்களுக்கு ஏற்ற வகையில் அஞ்சல் தலைகளை வடிவமைக்கும் வசதியை பயன்படுத்தி வெளியிட்ட அஞ்சல் தலை இது. நெதர்லேண்ட் அரசு தரப்பில் இது வெளியிடப்படவில்லை.
பரவிய செய்தி
நமது ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) 100 ஆண்டுக்கால சமூகப் பணிகளை குறிக்கும் வகையில் நெதர்லாந்து அரசு ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அங்கீகாரத்தின் குறிப்பிடத்தக்க அடையாளமாகும்.



விரிவான விளக்கம்
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் என்ற 'ஆர்.எஸ்.எஸ்' இயக்கம் 1925ஆம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்டது. ஆர் எஸ் எஸ் நிறுவப்பட்டு நூற்றாண்டுகள் கடந்துவிட்டதால் இந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி அதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. புது தில்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அஞ்சல் தலையை (Postal Stamp) பதிவிட்டு, இந்த சிறப்பு அஞ்சல் தலை ஆர்.எஸ்.எஸ்-ன் நூற்றாண்டு செயல்பாடுகளை சிறப்பிக்கும் வகையில் நெதர்லேண்ட் நாடு வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
The Netherlands has released a commemorative stamp to mark 100 years of the Rashtriya Swayamsevak Sangh (RSS).
A significant gesture of international recognition for one of India’s most influential social organisations. #RSS100Years pic.twitter.com/PtTgbMzxiB
உண்மை என்ன?
நெதர்லேண்ட் அரசு சார்பாக ஆர்.எஸ்.எஸ்-ன் நூற்றாண்டு செயல்பாடுகளை சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறதா? என்று இணையத்தில் தேடினோம். ஆனால் ஆங்கில மையநீரோட்ட ஊடகங்களிலும் செய்தித்தளத்திலும் கூட இப்படியோரு செய்தியைக் காணமுடியவில்லை.

இது குறித்து மேலும் தேடுகையில், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு (mouthpiece) பத்திரிகையான ‘Organiser’-ல் இது குறித்து ஒரு செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதில் நெதர்லேண்டில் இயங்கிவரும் ’இந்து சுயம்சேவக் சங்கம்’ என்ற ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பு ஆர்.எஸ்.எஸ்-ன் நூற்றாண்டு செயல்பாடுகளை சிறப்பிக்கும் வகையில் உலக அஞ்சல் தினத்தன்று இந்த அஞ்சல் தலை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு நெதர்லேண்ட் நாட்டின் அஞ்சல் துறை இணையத்தில் தேடிய போது, அதில் பணம் செலுத்தி தங்களுக்கு ஏற்ற வகையில் அஞ்சல் தலைகளை வடிவமைத்து பெற்றுக்கொள்ளும் ஒரு வசதி இருப்பதை பார்க்கிறோம்.
இதனை பயன்படுத்திதான் நெதர்லேண்ட் நாட்டில் இயங்கிவரும் ’இந்து சுயம்சேவக் சங்கம்’ ஆர் எஸ் எஸ்-ன் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நெதர்லேண்ட் நாட்டில் இயங்கிவரும் ’இந்து சுயம்சேவக் சங்கம்’ பணம் செலுத்தி தங்களுக்கு ஏற்ற வகையில் அஞ்சல் தலைகளை வடிவமைக்கும் வசதியை பயன்படுத்தி வெளியிட்ட அஞ்சல் தலையை, ஆர்.எஸ்.எஸ்-ன் நூற்றாண்டைக் குறிக்கும் நெதர்லேண்ட் அரசு வெளியிட்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.