YouTurn

தமிழ் வழியில் பொறியியல் படிப்பு இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அமித்ஷா கூறிய தவறான தகவல்!

தமிழ் வழியில் பொறியியல் படிப்பு இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அமித்ஷா கூறிய தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பொறியியல் போன்ற துறை சார்ந்த உயர்கல்வியை தமிழ்வழியில் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு வகைகளில் செயல்பட்டு வந்திருக்கிறது.

பரவிய செய்தி

The DMK govt is anti-Tamil because it has not introduced medical and engineering education in Tamil.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது.


image.png

X Link 

விரிவான விளக்கம்

சமீபத்தில் ’Times Now Summit 2025’ என்ற நிகழ்வில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேர்காணல் அளித்தார். அதில் ஒரு சிறு பகுதியை வீடியோவாக பதிவிட்டு, ‘மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது’ என்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பரப்புகிறார் அமித்ஷா. மேலும், ’தமிழ்நாட்டிலுள்ள இரயில் நிலையங்களில் இவ்வளவு காலம் தமிழில் அறிவிப்புகள் (Announcements) கொடுக்கப்பட்டதில்லை. தற்போது தான் தமிழில் அறிவிப்புகள் வாசிக்கப்படுகிறது’ என்றும் பேசியிருக்கிறார்.



உண்மை என்ன?


தமிழ்நாட்டில் தமிழ் வழியில் உயர்கல்வி படிப்புகள் குறித்து இணையத்தில் தேடியதில், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ’The Hindu’ வெளியிட்டுள்ள செய்தியைக் காண முடிந்தது. அதன்படி, ‘வரும் கல்வியாண்டிலிருந்து (அதாவது 2010-2011 கல்வியாண்டு) அண்ணா பல்கலைக்கழகத்தில் சோதனை முயற்சியாக B.E. இயந்திரவியல் (mechanical) மற்றும் கட்டுமானவியல் (civil) படிப்புகள் வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது தெரியவருகிறது. 


ஆனால் இந்த தமிழ் வழி பொறியியல் படிப்புகள்  இயந்திரவியல் (mechanical) மற்றும் கட்டுமானவியல் (civil) ஆகிய இரண்டு துறைகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டதும், அதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்ததும் தெரியவருகிறது. தமிழ் வழி பொறியியல் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஒற்றை இலக்கத்திலே இருந்துள்ளதாக செய்தி ஆதாரங்கள் உள்ளது. இது தமிழ் வழியில் பொறியியல் படிப்பதை பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பது காட்டுவதாக இருக்கிறது. 


2021ஆம் ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) சார்பாக பொறியியல் மாணவர்களிடம், பொறியியல் படிப்பை தங்களது தாய் மொழியில் படிப்பது பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் தாய் மொழியில் பொறியியல் படிக்க ஆர்வமாக இருந்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள்தான். ஆனால், கள யதார்த்தம் இதற்கு மாறாக இருந்தது. 



மாணவர்களுக்கு தமிழ்வழி படிப்பிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்படாதது, வேலை வாய்ப்புகளிலும், மேற்படிப்புகளிலும் வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பது ஆகியவைதான் அதிக மாணவர்கள் தமிழ் வழியில் பொறியியல் படிக்க ஆர்வமாக இருந்தும், தமிழ்வழி பொறியியல் படிப்பிற்கான இடங்கள் காலியாக இருப்பதற்கான காரணமாக  சொல்லப்படுகிறது. 



இந்நிலையில், பொறியியல், மருத்துவம், சட்டம், கால்நடை மருத்துவம் மற்றும் வேளாண்மை போன்ற துறை சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சியாக, முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் 170 புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்று 2021ஆம் டிசம்பம் மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் ஒதுக்கீடு கொடுக்கும் வகையில் 2010ஆம் ஆண்டு சட்டமும் கொண்டுவரப்பட்டது. 


இதிலிருந்து, பொறியியல் போன்ற துறை சார்ந்த உயர்கல்வியை தமிழ்வழியில் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு வகைகளில் செயல்பட்டு வந்திருப்பது தெரிகிறது. 


மேலும், தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அறிவிப்புகள் கொடுக்கப்படும் வழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. 


முடிவு:


பொறியியல் மருத்துவம் போன்ற துறை சார்ந்த படிப்புகள் தமிழில் இன்னும் கொண்டுவரப்படவில்லை என்று அமித்ஷா சொல்வது தவறான தகவலாகும். தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலையங்களில்  தற்போதுதான்  தமிழில் அறிவிப்புகள் வாசிக்கப்படுவதாக சொல்லப்படுவது பொய்யான தகவலாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.