யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
”ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பிரபாகரனை சித்தாந்த ரீதியாக திமுக தூண்டியதா?” என்ற கேள்விக்கு KP ‘அவ்வாறு சொல்லமுடியாது’ என்றே பதலளிக்கிறார்.
பரவிய செய்தி
"ராஜிவ் காந்தியை கொலை செய்ய சொன்னது..." கருணாநிதியும் வைகோவும்தான்.. - கே. இராகோத்தமன், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரணை செய்த *சிபிஐ புலனாய்வு அதிகாரி*
இப்போ இவனுங்க கூட்டணி.

விரிவான விளக்கம்
சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன், விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த KP என்பவர் கொடுத்த பேட்டியை பற்றி பேசுகையில், ‘ ராஜீவ் காந்தியை கொலை செய்ய முக்கிய தூண்டுதலாக இருந்தது வைகோ, கருணாநிதி போன்ற தமிழக அரசியல்வாதிதான்’ என்று KP வெளிப்படையாக பேசியதாக குறிப்பிடுகிறார். ரகோத்தமன் பேசிய இந்த வீடியோ துணுக்கு தற்போது பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
*👆👆"ராஜிவ் காந்தியை கொலை செய்ய சொன்னது..."*😱 கருணாநிதியும் வைகோவும்தான்..
- கே. இராகோத்தமன், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரணை செய்த *சிபிஐ புலனாய்வு அதிகாரி.*
இப்போ இவனுங்க கூட்டணி.🤦♂️🤦♂️ pic.twitter.com/P2e7t5glyO
உண்மை என்ன?
‘ரகோத்தமன் Interview’ என்ற keywords கொண்டு தேடியதில், ’Inspection Zone’ என்ற யூடியூப் தளத்தில் ஒரு நேர்காணலை காணமுடிந்தது. இந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த நேர்காணலில் பரப்பப்படும் துணுக்கு இடம்பெற்றிருக்கிறது.

இந்த நேர்காணலில் ரகோத்தமன் ‘KP’ என்பவர் ராஜீவ் காந்தி கொலை குறித்து நேர்காணல் கொடுத்ததாக குறிப்பிடுகிறார். இதுகுறித்து தேடியபோது, ‘KP Interview Exclusive - SPECIAL TO FIRSTPOST’ என்ற தலைப்பில் ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தது. இந்த நேர்காணல் எழுத்து வடிவத்திலும் (Transcript) ‘FIRSTPOST’ தளத்தில் காணக்கிடைக்கிறது.

இந்த Transcript-ன் ஆறாம் பாகத்தில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தது குறித்தும், ராஜீவ் காந்தி கொலை குறித்தும் கேள்விகள் கேட்கப்படுகிறது. ”ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பிரபாகரனை சித்தாந்த ரீதியாக திமுக தூண்டியதா?” என்ற கேள்விக்கு KP ‘அவ்வாறு சொல்லமுடியாது’ என்றே பதலளிக்கிறார். மேலும், தமிழக அரசியல்வாதிகள் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ’மாவீரன்’ பிம்பத்தை அளித்ததாகவும், அவர்கள் பிரபாகரனுக்கு பிராமண எதிர்ப்பை கற்றுக்கொடுத்ததாகவும் சொல்கிறார். இதனால், பிராமண எதிர்ப்பு காரணமாக ராஜீவ் காந்தியை பிரபாகரன் வெறுத்ததாக குறிப்பிடுகிறார்.
இதில் எந்த இடத்திலும், ‘ராஜீவ் காந்தியை கொலை செய்ய முக்கிய தூண்டுதலாக இருந்தது வைகோ, கருணாநிதி போன்ற தமிழக அரசியல்வாதிதான்’ என்று KP குறிப்பிடவில்லை.
முடிவு:
ராஜீவ் காந்தியை கொலை செய்ய முக்கிய தூண்டுதலாக இருந்தது வைகோ, கருணாநிதி போன்ற தமிழக அரசியல்வாதிகள்தான் என்று விடுதலைப் புலி இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளராக இருந்து பின்னர் ராஜபக்சே ஆதரவாளராக மாறிய குமரன் பத்மநாதன் (KP) பேட்டியளத்ததாக சிபிஐ முன்னாள் அதிகாரி ‘ரகோத்தமன்’ சொல்வது தவறாக தகவலாகும்.