யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்லாமியர்கள் பற்றிய மத வெறுப்பு கருத்தை பரப்பியதற்காக தான் ‘சங்கி பிரின்ஸ்’ என்ற பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் .
பரவிய செய்தி
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வீடியோவைப் பகிர்ந்ததற்காக @SanghiPrinceஐ தமிழக அரசு கைது செய்துள்ளது.
இது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சு என போலீசார் தெரிவித்தனர். ஆம், நீங்கள் கேட்டது சரிதான். ஆனால், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது தவறில்லை என்று நினைக்கிறீர்களா?

விரிவான விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முக்கிய நபரான ‘சங்கி பிரின்ஸ்’ என்று சொல்லப்படக்கூடிய பிரவீன் ராஜ் என்பவர் கடந்த ஜீலை 1ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யட்டார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வீடியோவைப் பகிர்ந்ததற்காகத் தான் ’சங்கி பிரின்ஸ்’ கைது செய்யப்பட்டிருப்பதாக பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.
He is @SanghiPrince.
He shared a video against @Udhaystalin.
Tamilnadu Police arrested him under hate speech.
I ask @tnpoliceoffl:
When will you arrest Udhayanidhi Stalin for his hate-speech against Hindu community? pic.twitter.com/73hsP0xdGz
உண்மை என்ன?
’சங்கி பிரின்ஸ்’ கைது செய்யப்பட்டது குறித்த செய்திகளை தேடியபோது, ‘INDIA TODAY’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அந்த செய்தியில், ’சங்கி பிரின்ஸ்’ கைது செய்யப்பட்டதற்காக காரணம் குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை கொடுத்த விளக்கம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், ’கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி, தமிழ் செய்தி ஊடகத்தில் வெளியான ஒரு செய்தியை பகிர்ந்து, சமூக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் குழைக்கும் வகையில் மத வெறுப்பு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனால் தான் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ‘சங்கி பிரின்ஸ்’-ன் சமூக வலைத்தள பக்கத்தில் தேடிய போது, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பதிவிட்டுள்ள மதவெறுப்பு பதிவைக் காணமுடிகிறது. அதில், திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாள பகுதியில் இரு வேறு இடங்களில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்டது குறித்த செய்தியை பகிர்ந்து, அதனை இஸ்லாமியர்கள் தான் செய்திருப்பார்கள் என்று மத வெறுப்பு கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

மேற்கூறிய காரணத்திற்காக தான் ‘சங்கி பிரின்ஸ்’ கைது செய்யப்பட்டிருப்பதாக நாமக்கல் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. போலி செய்திகளை பரப்பியதற்காக ’சங்கி பிரின்ஸ்’ மீது ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ‘வண்ண புகை வீசியவர்களுக்கு’ திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ’தர்மபுரி செந்தில் குமார்’ தான் அனுமதி சீட்டு வழங்கியதாக தவறான தகவலை பரப்பியதற்காக திருச்சி போலீஸால் ‘சங்கி பிரின்ஸ்’ மீது அப்போதே வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இரயில் தண்டவாளத்தில் சேதம் ஏற்படுத்துவது பற்றி இணையத்தில் தேடியபோது, ‘News 18 English’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ’ஓம்’ என்ற சாமியார் பலமுறை இரயில் தண்டவாளத்தில் கற்களையும், இரும்பு கம்பிகளையும் வைத்து இரயிலை சேதப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. ’பயணச் சீட்டு இல்லாத காரணத்தால் இரயிலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், அதற்கு பழி வாங்க இவ்வாறு செய்ததாகவும்’ அந்த சாமியார் வாக்குமூலமளித்துள்ளார்.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இஸ்லாமியர்கள் பற்றிய மத வெறுப்பு கருத்தை பரப்பியதற்காக தான் ‘சங்கி பிரின்ஸ்’ என்ற பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாக நிரூபணமாகிறது.
முடிவு:
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வீடியோவைப் பகிர்ந்ததற்காக ’சங்கி பிரின்ஸ்’ கைது செய்யப்பட்டிருப்பதாக பாஜக ஆதரவாளர்கள் தவறாக பரப்பிவருகிறார்கள். உண்மையில், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமியர்கள் குறித்து மத வெறுப்பு கருத்தை பரப்பியதற்காக ’சங்கி பிரின்ஸ்’ கைது செய்யப்பட்டுள்ளார்.