YouTurn

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தாரா கர்நாடக முதல்வர்? உண்மை என்ன?

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தாரா கர்நாடக முதல்வர்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

’கர்நாடக மாநிலம் சார்பாகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்பார்’ என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் சித்தராமையா.

பரவிய செய்தி

திமுக தலையில் விழுந்த அடி! தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்க இயலாது - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மறுப்பு.



X Link 

விரிவான விளக்கம்

இறுதியான 1971ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தற்போது உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை நடைமுறைக்கு வந்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்காக இதுவரை தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், வரும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்திருக்கிறது ஒன்றிய அரசு. மக்கள்தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்பதால், மக்கள்தொகை அதிகம் இருக்கும் மாநிலங்கள் தான் இதனால் அதிகம் பலனடையும். இது மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பது போன்று இருக்குமென்று கூறி தமிழ்நாடு இதனை எதிர்க்கிறது.


இது தொடர்பாகச் சென்னையில் கடந்த மார்ச் 5ஆம் தேதியன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களுடன் இணைந்து ‘கூட்டு நடவடிக்கை குழு’ ஒன்று அமைக்கப்பட்டது. அதன் கூட்டம் வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இந்நிலையில், இந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தமிழக அரசு ஏற்பாடு செய்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மறுத்துவிட்டதாகவும், இதனால் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த திமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது ’தமிழ் ஜனம்’ சேனல்.


உண்மை என்ன?


இதுகுறித்த பொருத்தமான keywords கொண்டு இணையத்தில் தேடியதில், ’தினகரன்’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தி எழுதப்பட்டிருந்தது.  



அதன்படி, ‘தான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் தன்னால் 22ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க இயலாது. தமக்குப் பதில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தமிழ்நாடு அரசின் கூட்டத்தில் பங்கேற்பார்’ என்று அந்த கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளதாக செய்தியில் உள்ளது.


மேலும், இந்த கடிதத்தை சித்தராமையா அவர் தனது அதிகாரப்பூர்வமான ’எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தெளிவாக, ‘இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நான் விரும்பினாலும், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட சில வேலைகள் காரணமாக என்னால் கலந்துகொள்ள இயலாது’ என்று குறிப்பிடுகிறார். மேலும், ’இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி கர்நாடக மாநிலம் சார்பாகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்பார்’ என்று அந்தக் கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார் சித்தராமையா. 


இந்த தகவல்களை மறைத்துவிட்டு, முற்றிலும் திமுகவிற்கு எதிரான செய்தியாகத் திரித்துப் பரப்பப்படுகிறது.


முடிவு:


’வேறு வேலைகள் காரணமாக என்னால் கலந்துகொள்ள இயலாது’  என்று  சித்தராமையா குறிப்பிட்டதைத் திரித்து  தமிழக அரசு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்க அவர் மறுத்துவிட்டதாக ’தமிழ் ஜனம்’ சேனல் தவறாகப் பரப்புகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.