யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒன்றிய அறிவிப்பதற்கு முன்பே தமிழ்நாடு அரசு முன்னோடியாக சில திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதான மந்திரி அவாஸ் யோஜனா, சகி நிவாஸ், விஸ்வகர்மா போன்ற திட்டங்களை நகல் எடுத்து (காப்பி அடித்து) வேறு பெயர்கள் வைத்து தமிழ்நாட்டில் திமுக அரசு செயல்படுத்தி வருவதாக மோடி ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த தகவல்களை இணையத்தில் தேடினோம்.
அதன்படி, ’பிரதான மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்திற்கான அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில், இத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வீடு இல்லாத மக்களுக்கு, வீடு கட்டவோ அல்லது வீடு வாங்கவோ மானியம் வழங்கும் விதமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், 2010 ஆம் ஆண்டே குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக முதன் முதலில் 'கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதன்படிதான் தற்போதைய 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 2030 ஆம் ஆண்டிற்குள் 'குடிசைகள் இல்லா தமிழகம்' என்ற இலக்கை அடையும் பொருட்டு 'கலைஞரின் கனவு இல்லம் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ’மிஷன் சக்தி’ திட்டத்தின் கீழ் உழைக்கும் பெண்களுக்கான தங்கும் விடுதி திட்டமான ’சகி நிவாஸ்’ செயல்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த பெண்கள் மேம்பாட்டுத் திட்டமாக இந்த ’மிஷன் சக்தி’ திட்டம் 202l-22 முதல் 2025-26 வரையுள்ள காலகட்டத்தில் செயல்படுத்தப்படும் என்றும் இதன் விதிமுறைகள் 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், "தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் (TNWWHCL)" என்ற பிரத்தியேக நிறுவனம் தமிழ்நாடு அரசால் 28.05.2019 அன்றே நிறுவப்பட்டது. இதன்படி தான் தற்போது ”தோழி” என்னும் மகளிர் தங்கும் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
’பிரிதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டம் 2000ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மோடி ஆட்சியில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட திட்டமல்ல.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி ரீதியான குலத் தொழிலை ஊக்குவிப்பதாகச் சொல்லி, அதற்கு மாற்றாகப் பிறப்பின் அடிப்படையிலான தொழில்களை ஊக்குவிக்கும் திட்டமாக அல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய கைவினைஞர்களுக்கான திட்டமாகத் தான் 'கலைஞர் கைவினைத் திட்டம்’ தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் ‘நகல் திட்டமல்ல’. அதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.


மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களிலிருந்து தமிழ்நாடு அரசு முன்னோடியாக சில திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளதையும், விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாகக் கலைஞர் கைவினைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதையும் அறிய முடிகிறது.
முடிவு:
பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களைக் காப்பியடித்து தமிழ்நாட்டில் திமுக அரசு செயல்படுத்துவதாக மோடி ஆதரவாளர்கள் சொல்வது தவறான கூற்றாகும்.
