யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த போரைத் தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அந்த தாக்குதலோடு தொடர்புடைய வீடியோ இது. இந்நிலையில் இந்த பழைய வீடியோவை “பாலஸ்தீனத்தை தாக்கிய இஸ்ரேல்” என்று கூறி தற்போது பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
ஜெய் இஸ்ரேல்
தீவிரவாதிகளுக்கு பாலாஷ்தீனம் அடைக்கலம் கொடுத்ததால் தான் இன்று இஸ்ரேல் வச்சு செய்றான்...
தமிழ்நாட்டில் தீவிரவாதிகளுக்கு நாம் இடம் கொடுத்தால் நாளைக்கு தமிழ்நாடு சுடுகாடு ஆகும்…

விரிவான விளக்கம்
காசாவில் கடந்த சில ஆண்டுகளாகவே போர் தொடர்ந்தாலும் இப்போது நிலைமை அங்கு மோசமாக இருக்கிறது. அங்குள்ள எல்லாக் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி வருகிறார்கள். இதையடுத்து கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் திடீரென, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் பாலஸ்தீனத்தை தாக்கிய இஸ்ரேல் என்று கூறி தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது New Arab என்ற ஊடகப்பக்கத்தில், “Iran says video of Tehran strike proves Israeli war crime” என்ற தலைப்பில் இது குறித்து ஜூலை 4, 2025 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடந்த போரின் போது, தெஹ்ரானின் தாஜ்ரிஷ் சதுக்கத்தில் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதாகவும், இந்த தாக்குதலில் குறைந்தது 18 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த தாக்குதல் ஜூன் 15ஆம் தேதி நடந்ததாக கூறி சிசிடிவி காட்சிகளை ஈரானின் ஊடகங்கள் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, Hindustan Times ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் “Tehran Witnesses Powerful Blasts: Iran Releases CCTV Video As Back-To-Back Explosions Blow Up Cars” என்ற தலைப்பில் ஜூலை 4 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் தெஹ்ரான் பகுதியில் ஜூன் 15 அன்று நடந்த தாக்குதலின் சிசிடிவி காட்சிகளை, ஜூலை 3 அன்று ஈரானின் 'பிரஸ் டிவி' வெளியிட்டதாகவும், தெஹ்ரானில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், டந்த ஜூலை மாதம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த போரைத் தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அந்த தாக்குதலோடு தொடர்புடைய வீடியோ இது. இந்த பழைய வீடியோவை “பாலஸ்தீனத்தை தாக்கிய இஸ்ரேல்” என்று கூறி தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.