யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த போர் வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின்.வழங்கியுள்ளதை செய்தியின் மூலம் காண முடிகிறது.
பரவிய செய்தி
“நாட்டு பாதுக்காப்பிற்காக எல்லையில் நின்று இறந்த வீரனின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் எந்த நிதியுதவியும் செய்வதில்லை. ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவன் வீட்டுக்கு அரசு நிதியுதவி செய்துள்ளது” - சீமான்

விரிவான விளக்கம்
மே 28ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாட்டு பாதுக்காப்பிற்காக எல்லையில் நின்று இறந்த வீரனின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் எந்த நிதியுதவியும் செய்வதில்லை. ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவன் வீட்டுக்கு அரசு நிதியுதவி செய்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
உண்மை என்ன?
இது குறித்து நாம் தேடிப் பார்த்தோம். முதலில் மாநில அரசு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளதா என்பது குறித்துத் தேடினோம். அப்போது நவம்பர் 30, 2021 அன்று “வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி:முதல்வர் வழங்கினார்” என்ற தலைப்பில், தினமணி இணையதளப்பக்கத்தில் வெளியான செய்தி ஒன்றைப் பார்க்கமுடிந்தது. அதில் ராணுவத்தில் பணியாற்றி வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசு தாரர்களை நேரில் அழைத்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சத்துக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது பிப்ரவரி 17, 2025 அன்று NEWS BYTES TAMIL ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றைப் பார்க்க முடிந்தது. அதில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு ரூ1.கோடி வரை மானியங்களுடன் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியும் வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து ஒன்றிய அரசு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளதா என்பது குறித்துத் தேடினோம். அப்போது அக்டோபர் 27,2023 அன்று Ministry of Personnel, Public Grievances & Pensions தரப்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் உறவினர்களுக்கு சுமார் ரூ.25 முதல் 45 லட்சம் வரை கருணைத் தொகை வழங்கிப்படுவதாகவும், இது தவிர ஒன்றிய ராணுவ நல நிதியத்தால் ரூ.8,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

முடிவு :
நம் தேடலில், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் எந்த நிதியுதவியும் செய்வதில்லை என்று சீமான் கூறிய தகவல் முற்றிலும் தவறானது.