யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மும்பையில் எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தை, பாகிஸ்தானில் நடப்பது போல் தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
தனது அழிவை தானே தேடிக் கொண்ட பாகிஸ்தான்: ஒரு இடமா இரண்டு இடமா எல்லா இடத்திலும் இருந்து (தரை கடல் வான்வெளி) தாக்கினால் என்னதான் செய்வது.முடியவில்லை என்று சொல்லவும் துணிச்சல் இல்லை.

விரிவான விளக்கம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்த நிலையில், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தனது அழிவைத் தானே தேடிக் கொண்ட பாகிஸ்தான் என்றும், எல்லா இடத்திலிருந்தும் தாக்குதல் நடைபெறுவதாகவும் ஒரு காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி திடீரென வெடித்துச் சிதறுகிறது.
தனது அழிவை தானே தேடிக் கொண்ட பாகிஸ்தான்:
ஒரு இடமா இரண்டு இடமா எல்லா இடத்திலும் இருந்து (தரை கடல் வான்வெளி) தாக்கினால் என்னதான் செய்வது.முடியவில்லை என்று சொல்லவும் துணிச்சல் இல்லை. pic.twitter.com/ipi2WT3lGN
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது The Times of India ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் மார்ச் 25 அன்று பரவி வரும் காணொளி பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அதில் மும்பை தாராவி பேருந்து பணிமனை அருகே ஏராளமான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது என்றும், இதில் 20க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்ததாகத் தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த செய்தி குறித்து keywords மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Mumbai: Dharavi JOLTED As 10+ LPG Cylinders Explode On Truck; Watch Shocking Moment என்ற தலைப்பில் மார்ச் 25 அன்று The Free Press Journal ஊடகத்தின் இணையத்தில் வெளியாகியிருந்ததைக் காணமுடிந்தது. அதில் தாராவியில் உள்ள நேச்சர் பூங்கா அருகே எல்பிஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. 10க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Hindustan Times ஊடகத்தின் இணையதளப் பக்கத்தில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் லாரி ஓட்டுநரின் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த தீ விபத்தில் லாரியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே Economic Times, India TV போன்ற ஊடகங்களிலும் இது குறித்தான செய்தி வெளியாகியுள்ளதைக் காணமுடிகிறது.

முடிவு :
மும்பையில் எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தை, பாகிஸ்தானில் நடப்பது போல் தவறாகப் பரப்புகின்றனர்.