யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் வழிபாட்டுத் தலத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்ததாகக் கூறி இரண்டு இஸ்லாமியக் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலை, மேற்கு வங்கத்தில் நடப்பது போல் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளனர்.
உயிர் தப்பித்து வேறு பகுதிகளுக்கு ஓடிய இந்துக்களின் வீடு மற்றும் தோட்டங்களை அடித்து நொறுக்கி நாசம் செய்கின்றனர்.
மணிப்பூர் கலவரம் பற்றி பேசிய தமிழக அரசியல்வாதிகள் முதல் தமிழக ஊடகங்கள் மேற்கு வங்க #முர்ஷிதாபாத்_கலவரம் பற்றி பேச மறுக்கின்றனர். கலவரம் செய்பவர்கள் இஸ்லாமியர்கள் என்றால் வாய்யை திறக்க அஞ்சுவது ஏன்?

விரிவான விளக்கம்
’குல்லா அணிந்த ஆண்கள் கையில் கட்டைகளுடன் நடந்து செல்லும் வழியில், ஏற்கனவே இடிக்கப்பட்ட ஒரு தகர கட்டிடத்தையும், பின்புலத்தில் தீ எறிவதற்கான அறிகுறியாக புகை மண்டலத்தையும்’ காட்சிபடுத்தும் வீடியோவை பதிவிட்டு, மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளதாகவும், அவர்கள் இந்துக்களின் வீடு மற்றும் தோட்டங்களை அடித்து நொறுக்கி நாசம் செய்வதாகவும், தமிழக ஊடகங்கள் மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் கலவரம் பற்றி பேச மறுப்பதாகவும் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Bangla Affairs என்ற யூட்யூப் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. ”ஷெர்பூரில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீது தாக்குதல், கொள்ளை” என்ற தலைப்பில், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை காணமுடிந்தது. இந்த வீடியோவிலுள்ள காட்சிகள், பரப்பப்படும் வீடியோவில் உள்ளவற்றுடன் பொருந்திப்போவதாக இருக்கிறது.
மேலும் இது குறித்து தேடிய போது, Jamuna TV என்ற யூடியூப் பக்கத்தில், ”ஷெர்பூர் தர்பார் ஷெரீப்பின் நாசவேலை மற்றும் கொள்ளை” என்ற தலைப்பில் இது குறித்து பதிவிடப்பட்டிருந்தது. இந்த யூடியூப் வீடியோவின் Description-ல் ”வங்கதேசம் ஷெர்பூர் சதாரில் உள்ள ’டோஜா பீர்’ தர்பாரில் தாக்குதல், நாசவேலை மற்றும் தீவைப்பு ஆகியவை நடந்தது. முர்ஷித்பூர் என்ற கிராமத்தின் மக்கள், உள்ளூர் குவாமி மதரஸாவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு, ’தர்பார் ஷெரீப்’ல் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் நடப்பதாகக் கூறி, தர்பார் ஷெரீப்பை மூடுமாறு கோரிக்கை விடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பீரின் ஆதரவாளர்களுடன் கிராம மக்கள் மோதினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து keywords கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Dhaka Tribune’ என்ற செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி, ’க்வாஜா பத்ருதுஜா ஹைதர்’ என்பவரின் தலைமையில் நடத்தப்படும் ’முர்ஷித்பூர் தர்பார் ஷெரீப்’ என்ற மத ஸ்தாபனம் அடித்து சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் கடந்தாண்டு நவம்பர் 26ஆம் தேதி வங்கதேசத்தில் ஷெர்பூர் என்ற பகுதியில் உள்ள லச்மன்பூர் என்ற இடத்தில் நடந்ததாகும். அதே போல் Daily Star என்ற இணையதள பக்கத்திலும் இது குறித்தான செய்தி பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் பரவி வரும் வீடியோ குறித்து கடந்தாண்டு டிசம்பர் 16ஆம் தேதியே FACT CHECK செய்துள்ளோம்.
மேலும் படிக்க : https://youturn.in/factcheck/a-video-claimed-to-be-muslims-in-bangladesh-are-wandering-with-weapons-to-attack-hindus.html
முடிவு :
வங்கதேசத்தில் வழிபாட்டுத் தலத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்ததாகக் கூறி, இரண்டு இஸ்லாமியக் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலை, மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமியர்கள் நடத்திக்கொண்டு உள்ளதாக தவறாக பரப்புகின்றனர்.