யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது ஊரடங்கு விதிகளை மீறியதற்காக போலீஸ் துரத்தியதை, தற்போது நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் மோதலுக்குப் பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் அசாமில் தேசத் துரோகிகளைத் துரத்தித் துரத்தி அடிக்கும் காவல்துறை என்று காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதில் காவல்துறையினர் லத்தி மூலம் அங்கிருப்பவர்களை அடிப்பது போன்றும், அங்கிருக்கும் மக்கள் பயந்து ஓடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவில் உள்ள வங்கதேசத்தினரை சுளுக்கு எடுத்த அசாம் காவல்துறை.🔥 pic.twitter.com/Q7SZ4f0Xvs
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியின் படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது arab chat page என்ற முகநூல் பக்கத்தில் டிசம்பர் 13, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. இதையடுத்து இந்த காணொளி 2022 முதலே பரவி வருவதை உறுதிசெய்ய முடிந்தது.

வேறு ஏதும் தகவல் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தோம். அப்போது E News Bangla என்ற செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், பரவி வரும் காணொளி காட்சிகள் இருந்ததைக் காணமுடிந்தது. "Police chase during lockdown! A man's lungi came off while running", என்ற தலைப்பில் செப்டம்பர் 8, 2020 அன்று இது குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
பரவி வரும் காணொளி 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் லத்தி மூலம் விரட்டியுள்ளது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாகத் தேடிய போது, இது குறித்தான எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
முடிவு :
நம் தேடலில், 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நடைபெற்ற சம்பவத்தை, தற்போது நடந்ததாகத் தவறாகப் பரப்புகிறார்கள்.
