யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரப்பப்படும் காட்சிகள் செப்டம்பர் 26, 2025 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ”ஐ லவ் முஹம்மது” பேரணியின் போது நடத்தப்பட்ட தடியடியின் காட்சிகள் ஆகும். இதற்கும் காமேனியின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
பரவிய செய்தி
சென்னை: அமெரிக்க தூதரகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாதிரி - யோகி ஜி ஆளும் உபி-யில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்...
பட்டக்ஸ்-ல் அடித்து பளுக்க வச்சி அனுப்பிவிட்டார்... யோகி ஜி...

விரிவான விளக்கம்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா பிப்ரவரி 28ஆம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் ஈரானுக்கு ஆதரவாகவும், கமேனி உயிரிழந்ததற்கு பேரணி நடத்திய இஸ்லாமியர் மீது உ.பி. போலீசார் தடியடி நடத்தியதாகக் கூறும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
தரமான அடி யோகி டா🔥
உத்தரப் பிரதேசம் லக்னோவில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளால் வீழ்த்தப்பட்ட அயத்துல்லா கமேனி ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி கலவரம்.
யோகி இடம் நடக்குமா... 😂
சும்மா வெளுத்து விட்டு இருக்காரு.. 🤣 pic.twitter.com/F0WHIsNy2q
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது NEWS9 Live ஊடகத்தில் செப்டம்பர் 26, 2025 அன்று பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் உத்தரபிரதேசத்தில் நடந்த ”ஐ லவ் முஹம்மது” பேரணிக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுத்த காட்சிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, NDTV ஊடகத்தில் செப்டம்பர் 26, 2025 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் தொழுகைக்கு பிறகு உத்தரபிரதேசத்தின் பரேலியில் ”ஐ லவ் முஹம்மது” சுவரெட்டி தொடர்பாக இஸ்லாமியா மைதானம் அருகே மோதல் தொடங்கியது. கல் வீச்சு தொடங்கியபோது நிலைமை வன்முறையாக மாறியது. இதனால் காவல்துறையினர் தலையிட்டு ஒழுங்கை மீட்டெடுக்க தடியடி நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, உத்தரப் பிரதேசத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொலைப்பட்டதற்காக ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாக பரவும் வீடியோ தவறானவை. பரப்பப்படும் காட்சிகள் செப்டம்பர் 26, 2025 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ”ஐ லவ் முஹம்மது” பேரணியின் போது நடத்தப்பட்ட தடியடியின் காட்சிகள் ஆகும்.