யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டை விட மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் மாணவர்கள் தற்கொலைகள் அதிகமாக நடக்கிறது.
பரவிய செய்தி
“கல்வி அழுத்தத்தால் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது” - அபூபக்கர், நாம் தமிழர் கட்சி
விரிவான விளக்கம்
‘Arrow Roots’ என்ற யூட்யூப் தளத்தில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவர், ‘கல்வி அழுத்தத்தால் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது’ என்று கூறினார்.
உண்மை என்ன?
பள்ளி கல்லூரி மாணவர்கள் கல்வி அழுத்தம் (Academic Pressure) காரணமாக தற்கொலை செய்துவது குறித்த தரவுகளைத் தேடியபோது, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தை காணமுடிந்தது. Accidental Deaths & Suicides in India 2023’ என்ற அந்த ஆவணத்தில் 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் விபத்துகளால் நடக்கும் மரணங்கள் மற்றும் தற்கொலைகள் பற்றிய தரவுகள் தொகுக்கப்பட்டிருந்தது.

2023ஆம் ஆண்டில் நடந்த மாணவர்கள் தற்கொலைகளில் 14.7 சதவீதம் மகாராஷ்ட்ராவிலும், 10.5 சதவீதம் மத்திய பிரதேசத்திலும், 9.9 சதவீதம் உத்தர பிரதேசத்திலும், 9.6 சதவீதம் தமிழ்நாட்டிலும் நடந்திருக்கிறது. அதாவது, 2023ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 1,339 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் இந்திய அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

அதேபோல், 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுவதும் நடந்த தற்கொலைகளில் 1.4 சதவீதம் தேர்வில் தோல்வியடைந்தது காரணமாக நடந்துள்ளது. அதிலும் 18 வயதிற்கு குறைவான மாணவர்கள் 1303 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2023 ஆண்டில் மட்டும் 104 பள்ளி கல்லூரி மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தது காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இந்த வகையில், தேர்வில் தோலியடைந்தது காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதில் தமிழ்நாடு இந்திய அளவில் 8ஆவது இடத்தில் உள்ளது.

NEET, JEE போன்ற தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மத்தியில் நடக்கும் தற்கொலைகளை கணக்கில் கொள்ளும் போது ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளது. NEET, JEE தேர்வுகள் பங்கேற்ற 55 மாணவர்கள் ராஜஸ்தானில் இதுவரை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக இரண்டாவது இடத்தில் தமிழ்நாட்டில் 13 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இதிலிருந்து பார்க்கும் போது, 2023ஆம் ஆண்டில் 1,339 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். ஆனால் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை வெறும் 104 தான்.
வயது வாரியான தற்கொலைக்கான காரணங்களும் இந்த ஆவணத்தில் தொகுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதில் 18 வயதிற்கு குறைவானவர்கள் (Below 18) குடும்ப பிரச்சினைகள், நோய், காதல் விவகாரங்கள் ஆகிய காரணங்களுக்காக அதிகமாக தற்கொலை செய்திருகிறார்கள். அதேபோல், 18 முதல் 30 வயதுடையவர்கள் குடும்ப பிரச்சினைகள், திருமணம் சார்ந்த பிரச்சினைகள், நோய், காதல் விவகாரங்கள் ஆகிய காரணங்களுக்காக அதிகமாக தற்கொலை செய்திருகிறார்கள்.
மாணவர்கள் என்பவர்கள் இந்த இரண்டு வயது பிரிவில் தான் அதிகமாக இருப்பார்கள். இதிலிருந்து மாணவர்கள் படிப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்காக மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக கருத முடியாது என்பது தெளிவு. தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 1,339 மாணவர்கள் அனைவருமே கல்வி அழுத்தம் காரணமாக மட்டுமே அவ்வாறு செய்ததாக கருத முடியாது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
முடிவு:
கல்வி அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபூபக்கர் கூறுவது தவறானதாகும்.