யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தூத்துக்குடியில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்த நவி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஸ் பட்டீஸ்வர் துபே, 51, தஸ்ரத் மச்சிந்திரா கோகரே, 49, துாத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், 43, சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், 50, ஆகிய நால்வரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பரவிய செய்தி
5 சீன பட்டாசுகள் பறிமுதல்
ஒருவன் பெயர் ஸ்டீபன், இன்னொருத்தன் ஜான், மற்றொருவன் இஸ்மாயில்,
கடைசியாக முகமது அலி!
தமிழர்களின் உழைப்புக்கு எதிரி இந்த தேசவிரோத கும்பல்.

விரிவான விளக்கம்
தூத்துக்குடியில் தடையை மீறி ரூ.5 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகளை இறக்குமதி 4 பேர் கைது என்று News Tamil 24x7 ஊடகத்தின் நியூஸ் கார்ட்டை பதிவிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
5 சீன பட்டாசுகள் பறிமுதல்
ஒருவன் பெயர் ஸ்டீபன், இன்னொருத்தன் ஜான், மற்றொருவன் இஸ்மாயில்,
கடைசியாக முகமது அலி!
தமிழர்களின் உழைப்புக்கு எதிரி இந்த தேசவிரோத கும்பல். pic.twitter.com/1Q4IYpmplY
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தியை keywords மூலம் தேடி பார்த்தோம். அப்போது தினமலர் ஊடகத்தில் "ரூ.5 கோடி சீனா பட்டாசு துாத்துக்குடியில் பறிமுதல்; நான்கு மும்பை தொழிலதிபர்கள் சுற்றிவளைப்பு" என்ற தலைப்பில் அக்டோபர் 20 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 5 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக, நவி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஸ் பட்டீஸ்வர் துபே (51), தஸ்ரத் மச்சிந்திரா கோகரே(49), துாத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன்(43), சூசை மாணிக்கம் ஜெயேந்திரன்(50) ஆகிய நால்வரையும் அதிகாரிகள் கைது செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் விகடன் ஊடகத்தில், "சீனா டு தூத்துக்குடி; துறைமுகத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான சீன `பைப்' பட்டாசுகள் -விவரம் என்ன?" என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் சீன பட்டாசுகளை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தொழில் அதிபர்கள் சிலர் என்ஜினீயரிங் பொருட்கள் பெயரில் ஆவணம் தயாரித்து, சீன பட்டாசுகளை கன்டெய்னர்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகிய 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, தூத்துக்குடியில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்த நவி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஸ் பட்டீஸ்வர் துப, தஸ்ரத் மச்சிந்திரா கோகரே, துாத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், ஆகிய நால்வரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று கூறி வகுப்புவாதத்தை தூண்டும் வண்ணம் தவறாகப் பரப்பி வருகின்றனர்.