யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“ரமலான் மாதத்தில், வட இந்திய மாநிலங்களிலிருந்து பல பிச்சைக்காரர்கள் கேரளாவிற்கு வருகிறார்கள். அவர்கள் குற்றவாளிகள். பெண்களை கவனமாக இருக்க சொல்லுங்கள்” எனப் பரவி வரும் செய்திகள் போலியானவை. கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்தே கேரளக் காவல்துறை பரவி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
“ரமலான் மாதத்தில், வட இந்திய மாநிலங்களிலிருந்து பல பிச்சைக்காரர்கள் கேரளாவிற்கு வருகிறார்கள். அவர்கள் குற்றவாளிகள். பெண்களை கவனமாக இருக்க சொல்லுங்கள்”

விரிவான விளக்கம்
கேரள காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறி செய்தியறிக்கை ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருகிறது. அதில் ரமலான் மாதத்தில் வட இந்திய மாநிலங்களிலிருந்து பல பிச்சைக்காரர்கள் கேரளாவிற்கு வருகிறார்கள் என்றும், அவர்கள் கடுமையான குற்றவாளிகள் என்றும், பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் வந்துள்ளனர் என்றும், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் ஏழைகளிடம் கொள்ளையடிக்க அவர்கள் அங்கு வந்திருப்பதைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி அறிக்கை குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது இதே செய்தி அறிக்கை மலையாளத்திலும் வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அந்த அறிக்கையை தான் தமிழில் மொழி பெயர்த்து பரப்பி வருவதையும் உறுதிச் செய்யமுடிந்தது.

இதையடுத்து அந்த மலையாள செய்தி அறிக்கை குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது மே 09, 2018 அன்று Kerala Police தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுருந்தது. அதில் ரமலான் பண்டிகையின் போது வட இந்திய மாநிலங்களிலிருந்து பிச்சைக்காரர்கள் போல் வேடமிட்டு குற்றவாளி கும்பல்கள் கேரளாவிற்குள் வருவார்கள் என்று கொல்லம் கிழக்கு காவல்துறையின் பெயரில் அறிக்கை ஒன்றை கவனிக்க முடிந்தது. கொல்லம் கிழக்கு காவல்துறை அத்தகைய எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து The News Minute ஊடகத்திலும் மே 09, 2018 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் பரவி வரும் அறிக்கை போலியானது என்றும், காவல்துறை அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கவில்லை எனவும் கேரளா காவல்துறை விளக்கமளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல் ஏப்ரல் 20, 2019 அன்று கேரளா மாநில காவல்துறை தலைவர் பேஸ்புக் பக்கத்தில் மற்றொரு பதிவு வெளியாகியிருந்தது. அதில் வட இந்தியாவிலிருந்து கேரளாவிற்கு வரும் பிச்சைக்காரர்கள் குற்றவாளிகள் என்று கேரள காவல்துறையால் பரப்பப்படும் செய்தி தவறானது. கேரள காவல்துறை அத்தகைய செய்தியை வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, மார்ச் 12, 2024 அன்று கேரளா மாநில காவல்துறை ஊடக மையம் வெளியிட்ட மற்றொரு பதிவையும் பார்க்கமுடிந்தது. அதில் போலிச் செய்திகளை உருவாக்குவது மட்டுமல்ல, அதைப் பரப்புவதும் குற்றம் என்று குறிப்பிட்டு, அந்த அறிக்கை போலியானது என்பதை உறுதி செய்திருந்தனர்.
இதிலிருந்து இந்த போலி அறிக்கை 2018ஆம் ஆண்டு முதலே பல முறை பரவி வந்துள்ளதை உறுதிசெய்ய முடிந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், “ரமலான் மாதத்தில், வட இந்திய மாநிலங்களிலிருந்து பல பிச்சைக்காரர்கள் கேரளாவிற்கு வருகிறார்கள். அவர்கள் குற்றவாளிகள். பெண்களை கவனமாக இருக்க சொல்லுங்கள்” எனப் பரவி வரும் செய்திகள் போலியானவை. கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்தே கேரளக் காவல்துறை பரவி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.