யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற திமுக பாடல் ஒலிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல, எடிட் செய்யப்பட்டது. அவரது பிரச்சாரத்தின் போது, வேறு ஒரு பாடலே ஒலிக்கிறது.
பரவிய செய்தி
Claim 1 : இபிஎஸ் பிரச்சாரத்தில் போவ் ஸ்டாலின் கீதம்

Claim 2 : உள்ளுக்குள்ள இருந்த ஜெபமாலை திடீர்னு ஏன் வெளியே தொங்குது??
ஓஹோ கன்னியாகுமரி!!!
"தோத்திரும் ஃபாதர்"

விரிவான விளக்கம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற திமுக பாடல் ஒலிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அதே போல் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய், ஜெபமாலை அணிந்து பிரச்சாரம் மேற்கொண்டார் என்று புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன?
Claim 1 : இபிஸ் பிரச்சார வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” பாடல்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” பாடல் ஓடியதா என்பது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது AIADMK Official யூடியூப் பக்கத்தில், ”ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்” என்ற தலைப்பில் முழு வீடியோவும் பதிவாகியிருந்தது.
சரியாக 21:20 நிமிடத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதில் வேறு ஒரு பாடலே ஒலிப்பதை தெளிவாக பார்க்கமுடிகிறது. இதை “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற திமுக பாடல் ஒலிக்கப்பட்டதாக எடிட் செய்தி பரப்பி வருகின்றனர்.
Claim 2 : ஜெபமாலை அணிந்து பிரச்சாரம் மேற்கொண்ட விஜய்!
முதலில் கன்னியாகுமரியில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரம் குறித்த வீடியோவை பார்த்தோம். அப்போது புதிய தலைமுறை ஊடகத்தில், “ குமரியை அதிரவைத்த விஜய்யின் முழுப்பேச்சு” என்ற தலைப்பில் ஏப்ரல் 12, 2026 அன்று அதன் முழு வீடியோவும் வெளியாகியிருந்தது.
சரியாக 13:40வது நிமிடத்தில், பரவி வரும் புகைப்படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதில் தவெகவைச் சேர்ந்த கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சபின், கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய வந்த விஜய்க்கு பரிசாக மாதா சிலையையும், ஜெபமாலையையும் கொடுத்துள்ளார். அதை தான் விஜய் அணிந்திருந்தார். இதனை மத நோக்கில் பாஜகவை சேர்ந்த சரவணா பிரசாத் தவறாக பரப்பி வருகிறார்.
முடிவு:
எனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற திமுக பாடல் ஒலிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. அதே போல் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சபின், கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய வந்த விஜய்க்கு பரிசாக மாதா சிலையையும், ஜெபமாலையையும் கொடுத்ததை தான் விஜய் அணிந்திருந்தார்.