யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் இணையதளப் பக்கத்தை “Scam Detector” இணையத்தளம் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், “மிகவும் ஆபத்தான இணையதளம் இது” என்று தெரிவித்தது. எனவே பொதுமக்கள் யாரும் இத்தகைய மோசடி இணையதள பக்கங்களை பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.
பரவிய செய்தி
பிரதமர் மோடியிடமிருந்து சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு இந்தியருக்கும் 699 ரூபாய் வரை பரிசு வழங்கப்படுகிறது. இப்போது இங்கே கிளிக் செய்து உங்கள் பரிசுத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுங்கள்.

விரிவான விளக்கம்
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியிடமிருந்து ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசு தரவிருப்பதாக கூறி வீடியோ ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் வைரலாகும் தகவலுடன் கூடிய லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது, சுதந்திர தினத்தன்று மோடி ஜியிடம் இருந்து உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்துள்ளது, இப்போது ஸ்க்ராச் செய்து உங்கள் வங்கிக் கணக்கில் ₹5000 வரை ரொக்கம் பெற்றிடுங்கள் என்று கூறி இணையதளம் ஒன்று தோன்றியது. அதில், SCRATCH HERE என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் ஸ்க்ராட்ச் செய்தால் நமக்கான பரிசுத்தொகை என்று குறிப்பிட்ட தொகை ஒன்று தோன்றுகிறது.

இதையடுத்து அந்த இணையதளத்தின் கிழே, இப்போது இந்த பொத்தானை தட்டுங்கள் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்த போது, ‘Receiving Payment using’ என்கிற பாப் அப் ஃபோன்பே மற்றும் பேடிஎம் லோகோவுடன் வந்தது. இதனையடுத்து அவைகளை கிளிக் செய்ய முயற்சித்தோம். ஆனால் அந்த பக்கம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை.
மேலும் இந்த இணையதளம் பக்கம் உண்மையா என்பது குறித்து ஆராய்ந்தோம். பொதுவாக ஒன்றிய அரசின் இணையதளப்பக்கம், gov. in என்றே இருக்கும். ஆனால் இந்த பக்கத்தில் rewardss-gift-offer. live என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பரவி வரும் இணையதளப் பக்கத்தை “Scam Detector” இணையத்தளம் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், “மிகவும் ஆபத்தான இணையதளம் இது” என்று தெரிவித்தது.

அதே போல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, ரக்ஷாபந்தன் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடிமக்களுக்கு ₹5,000 ரொக்கப் பரிசுகளை வழங்குவதாகவும் போலியாக பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு:
எனவே, சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியிடமிருந்து ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசுத்தொகை தரவிருப்பதாக பரவி வரும் செய்தி போலியானது. இது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.