
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
கார்கே கூறுவதை கேளுங்கள்...
உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அதிக பிள்ளைகளை பெற்ற முஸ்லீம்களுக்கு கொடுப்போம்.
ஹிந்துக்களிடம் அதிக பிள்ளைகள் இல்லாததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?( சரி பார்க்கவும்) pic.twitter.com/eV6Ydpo53L
— john ravi. (@johnravi1974) May 6, 2024
அப்படி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு மேடையில் பேசும் போது, இந்துக்களின் வீட்டில் நுழைந்து அலமாரியை உடைத்து அதில் உள்ள பணத்தை எடுத்து அதிக பிள்ளைகளைப் பெற்ற முஸ்லீம்களுக்குக் கொடுப்போம் எனக் கூறியதாக 28 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜகவினரால் பரப்பப்படுகிறது.
கார்கே கூறுவதை கேளுங்கள்...
உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அதிக பிள்ளைகளை பெற்ற முஸ்லீம்களுக்கு கொடுப்போம்.
ஹிந்துக்களிடம் அதிக பிள்ளைகள் இல்லாததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
இது போன்ற தேச விரோத காங் தலைவர்களை அடித்து விரட்ட வேண்டும் pic.twitter.com/Y404mx0Haq
— Krishnaraj (@Krishna73674119) May 6, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், இது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியது என்பதை அறிய முடிந்தது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காங்கிரசின் அதிகாரப் பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் கார்கே பேசுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். எத்தனை பட்டதாரிகள் உள்ளனர். எவ்வளவு வருமானம் வருகிறது. தனிநபர் வருமானம் எவ்வளவு என்பதை எல்லாம் பார்த்து வாய்ப்புகள் சமமாகப் பகிர்ந்தளிப்போம் எனக் கூறுகிறார்.
மேற்கொண்டு பேசுகையில், நாங்கள் இப்படிச் சொல்வதை மோடி எவ்வாறு மாற்றித் திரித்துச் சொல்கிறார் எனில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் (இந்துக்கள்) வீடுகளின் உள்ளே நுழைந்து அலமாரியை உடைத்து அதில் உள்ள பணத்தை அதிக பிள்ளை பெற்ற முஸ்லிம்களுக்குக் கொடுக்க இருக்கிறார்கள் எனப் பொய் பேசுவதாகக் குறிப்பிடுகிறார்.
ஜாதி மற்றும் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பைக் காங்கிரஸ் மேற்கொள்ளும் என்றும் அதற்கு ஏற்ப வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறுவதை மோடி தவறாகத் திரித்துப் பொய் பிரச்சாரம் செய்து வருவதை கார்கே சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். அந்த வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து அது கார்கேவின் கருத்து எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
ராஜஸ்தானில் பிரசாரத்தின்போது மோடி பேசுகையில், நாட்டு மக்களின் சொத்துகளில் இஸ்லாமியர்களுக்குத் தான் முதல் அதிகாரம் எனக் காங்கிரஸ் தெரிவித்தது. ஊடுருவல் காரர்களுக்கு ஆதரவாக நாட்டின் செல்வத்தை மறுபங்கீடு செய்யக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அப்படியென்றால் நம் தாய்மார்கள், சகோதரிகளின் தாலி கூட மிஞ்சாது எனக் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்கள் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கர்நாடகாவில் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ் என மோடி பேசிய பொய் குறித்தும் யூடர்னில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : ‘இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ்’ என தவறான செய்திகளைப் பரப்பும் பிரதமர் மோடி!
முடிவு :
இந்துக்களின் வீட்டு அலமாரிகளில் உள்ள பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்குக் கொடுப்போம் என கார்கே பேசியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது.