யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சந்திப்பது போன்று பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
இது தான் எல்லோருக்கும் ஆன தலைவன்.... நீங்கள் எவ்வளவு தூற்றினாலும் அவர் கடமையை பாரபட்சம் பார்க்காமல் செய்யும் மகான் எங்கள் தலைவர் மோடி…
விரிவான விளக்கம்
சமீபத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சந்திப்பது போன்று உள்ள புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
2016 லில் அம்மா
இட்லி சாப்பிட்டாங்கோ,
பொங்கல், பூரி சாப்பிட்டாங்கோன்னு
சசி க்ரூப் கதை விட்டிச்சே..
இந்த மாதிரி ஏன் நடக்கலை? 🤔 pic.twitter.com/5IebrJaOun
உண்மை என்ன?
முதலில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்து ஆய்வு செய்தோம். அதன்படி, சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் “சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் ஏற்படக்கூடிய தொற்று குறித்து மருத்துவர்கள் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் குழு ஒன்று அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்று கூறியுள்ளது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பிரதமர் மோடி சோனியாகாந்தியை சந்தித்தது குறித்த செய்திகள் எதிவும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. உண்மையான சம்பவமாக இருந்தால் கண்டிப்பா செய்திகளில் இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கும்.
எனவே பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவே, “Hive Moderation’ இணையப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், இது AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் தான் என்பது உறுதியானது.

முடிவு:
நம் தேடலில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சந்திப்பது போன்று பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.