யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை என்று குறிப்பிட்டுயிருந்தது. மனிதாபிமானமற்ற என்ற வார்த்தையை மனிதாபிமானம் என்று எடிட் செய்து பொய் செய்தி பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
RSB media No:2. இவ்வளவு உணர்ச்சி மிகுந்த நிகழ்வில் இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதே!?
திமுகவின் கைப்பாவையாக மாறியதின் விளைவா.. அல்லது News editor-ன் கவனக்குறைவா??

விரிவான விளக்கம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று டிரெண்டாகி உள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டில் 23-04-2025 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து விகடன் சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது vikatan_emagazine-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பரவி வரும் நியூஸ் கார்ட் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தாக்குதலுக்குப் பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். - மு.க.ஸ்டாலின்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிந்தது.

மேலும் இது குறித்து முதலமைச்சர் பேசிய காணொளி கிடைக்குமா என்பதைத் தேடிப் பார்த்தோம். அப்போது புதிய தலைமுறை ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் "பஹல்காம் தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது" முதல்வர் சட்டப்பேரவையில் இரங்கல் என்ற தலைப்பில் ஏப்ரல் 23ஆம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. காணொளியின் 0.5 நொடிகளில் இது குறித்துப் பேசிய முதலமைச்சர், ”நேற்றைய தினம் பைசரன் என்ற மலைப்பகுதியிலிருந்து, திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது இது போன்ற நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் கண்டிக்கத்தக்கது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே போல் Sun News ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் “ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனங்களையும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் - முதலமைச்சர்“ என்று குறிப்பிட்டுள்ளது.
முடிவு :
இறுதியாக நம் தேடலில், மனிதாபிமான என்ற வார்த்தையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. எனவே மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் என்று முதல்வர் பேசியதாகப் பரவி வரும் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.