யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நேர்காணலில் சாதி வாரி கணக்கெடுப்பு, காலை உணவு திட்டம் போன்றவற்றை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
CLAIM 1 :
தமிழ்நாடு காவல்துறையை விட அமலாக்கத்துறையின் வழக்குகளில் தண்டனை விகிதத்தின் சதவீதம் அதிகமாக உள்ளது.
CLAIM 2 :
தனியார்ப் பள்ளியில் இருக்கும் தரமான கல்வி, அரசுப் பள்ளியில் இல்லை, நிறையப் பேர் தேர்ச்சி பெறுவதில்லை.
CLAIM 3 :
சாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசவில்லை.
CLAIM 4 :
காலை உணவுத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி தருகிறது.

விரிவான விளக்கம்
பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் அல்லிமுத்து, மே 4ஆம் தேதி தினமலர் ஊடகத்தின் யூடியூப் பக்கத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் சாதி வாரிக் கணக்கெடுப்பு, காலை உணவுத் திட்டம், மண்டல் கமிஷன் போன்ற பல திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன ?
1 : தமிழ்நாடு காவல்துறையை விட அமலாக்கத்துறையின் வழக்குகளில் தண்டனை விகிதத்தின் சதவீதம் அதிகமாக உள்ளது.
அமலாக்கத்துறையின் தண்டனை விகிதம் குறித்து இணையத்தில் தேடியதில், ’Live Law’ செய்தித்தளத்தில் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதன்படி, 01.01.2019 முதல் 31.10.2024 வரையிலான ஐந்தாண்டுக் காலத்தில் பண மோசடி தொடர்க்காக அமலாக்கத்துறையால் பதியப்பட்ட 911 வழக்குகளில் 654 வழக்குகளில் விசாரணை நிறைவுற்றுள்ளது. ஆனால், அதில் வெறும் 42 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் தண்டனை விகிதம் 6.42 சதவீதம் மட்டுமே ஆகும்.

மேலும் தேடியதில், 2022 ஜூலை மாதம் ’Hindustan Times’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், ’2022ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 5,422 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் 23 குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் தண்டனை விகிதம் 0.5 சதவீதத்திற்கும் குறைவானதாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டின் வழக்கு விகிதம் குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது TIMES OF INDIAவின் இணையத்தில் செப் 19, 2022 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றைக் காணமுடிந்தது. அதில் NCRB’s Crime in India - 2021-ல் தமிழ்நாட்டின் வழக்கு விகிதம் 73.3 சதவீதம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதிலிருந்து அமலாக்கத்துறையின் தண்டனை விகிதம், தமிழ்நாடு காவல்துறையின் தண்டனை விகிதத்தை விட குறைவு என்பது நிரூபணமாகிறது.
2 : தனியார்ப் பள்ளியில் இருக்கும் தரமான கல்வி, அரசுப் பள்ளியில் இல்லை, நிறையப் பேர் தேர்ச்சி பெறுவதில்லை.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறித்துத் தேடிப் பார்த்த போது, தற்போது வெளியான பன்னிரண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்ததைக் காணமுடிந்தது. அதில் தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணாக்கர்களும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 95.71% மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 436 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதைக் காணமுடிந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, The New Indian Express 14 ஏப்ரல் 2025 அன்று வெளியான கட்டுரை ஒன்று கிடைத்தது. அதில், பள்ளிக் கல்வித் துறையின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெறும் மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளதாகவும், 2023-24 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களில் குறைந்தது 74% பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனவே அரசுப் பள்ளியில் தரமான கல்வி இல்லை, நிறையப் பேர் தேர்ச்சி பெறுவதில்லை என்று கூறிய தகவலில் உண்மை இல்லை.
3 : சாதி வாரிய கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசவில்லை.
சாதி வாரிய கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் பேசியது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது 26 ஜூன் 2024 அன்று மாலை மலர் செய்தி ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் கொண்டுவந்த தனி தீர்மானம் நிறைவேற்றம் என்று NewsTamil 24x7 ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
4. காலை உணவுத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி தருகிறது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி அளிக்கிறதா என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இணையதள பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிப் பார்த்ததில், இந்து தமிழ் ஊடகத்தில் 05 ஜனவரி, 2024 அன்று “தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன?” - முதல்வர் ஸ்டாலின் @ நிதி பகிர்வு விவகாரம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் தமிழகத்திலிருந்து பெற்ற வரியை விடத் தமிழக அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்குச் செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே காலை உணவுத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு தான் நிதி அளிப்பதாகக் கூறப்படும் தகலில் உண்மையில்லை.
முடிவு :
இறுதியாக நம் தேடலில், நேர்காணலில் பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கூறியது உண்மையில்லை. சாதி வாரிக் கணக்கெடுப்பு, காலை உணவுத் திட்டம் போன்றவற்றைக் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்.