யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நிதி ஆயோக் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ’பல் பரிமாண வறுமை குறியீடு’ அறிக்கையில் பீகாரில் 33.76% வறுமை நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது. அதே போல் பீகாரில் மதுவிலக்கு 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்டது. அப்போது லாலு பிரசாத், நிதீஷ் குமார், காங்கிரஸ் இடம்பெற்றிருந்த மகாகத்பந்தன் கூட்டணி தான் ஆட்சியில் இருந்தது.
பரவிய செய்தி
Claim 1 : பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத், நிதீஷ் குமார், காங்கிரஸ்
கூட்டணி ஆட்சியில் இருந்த போது 30% மக்கள் வறுமையில் இருந்தது. பாஜக - நிதீஷ் குமார் கூட்டணி ஆட்சியில் வறுமை 5 சதவீதமாக குறைந்துள்ளது - சுமதி மேகவர்ணம்

Claim 2 : நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி பீகாரில் மது விலக்கு கொண்டு வந்தது - சுமதி மேகவர்ணம்

விரிவான விளக்கம்
பேசு தமிழா பேசு யூடியூப் பக்கத்தில் பாஜக மகளிரணி சமூக ஊடக மாநில அமைப்பாளர் சுமதி மேகவர்ணம் அளித்த நேர்காணல் ஒன்றை பார்க்க முடிந்தது. அதில் சரியாக 7.01 முதல் 7.20ஆவது நிமிடத்தில் பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத், நிதீஷ் குமார், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது 30% மக்கள் வறுமையில் இருந்தது. பாஜக - நிதீஷ் குமார் கூட்டணி ஆட்சியில் வறுமை 5 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 7.59 முதல் 8.18ஆவது நிமிடத்தில் நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி பீகாரில் மது விலக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன?
முதலில் பீகாரில் பாஜக - நிதீஷ் குமார் கூட்டணி ஆட்சியில் வறுமை 5 சதவீதமாக குறைந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். அப்போது Times Of India ஊடகத்தில் ஜூன் 18, 2025ல், “Bihar among select states in poverty reduction: Minister Vijay Kumar” என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் தேசிய அளவில் வறுமை ஒழிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் பீகார் ஒன்றாகும் என்று நீர்வள மேம்பாட்டு (WRD) அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நிதி ஆயோக் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ’பல் பரிமாண வறுமை குறியீடு’ அறிக்கையில் பீகாரில் 33.76% வறுமை நிலவுவதாக குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை மறைத்து பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத், நிதீஷ் குமார், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது 30% மக்கள் வறுமையில் இருந்ததாகவும், பாஜக - நிதீஷ் குமார் கூட்டணி ஆட்சியில் வறுமை 5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் சுமதி மேகவர்ணம் என்பவர் தவறான தகவலை பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி பீகாரில் மது விலக்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தது குறித்து தேடினோம். அப்போது பீகார் காவல்துறை மதுவிலக்கு தடை குறித்து வெளியிட்ட அறிக்கையை பார்க்கமுடிந்தது. அதில் பீகார் மாநிலத்தில் மது மற்றும் போதைப்பொருட்களின் முழுமையான தடையை இயற்றவும், செயல்படுத்தவும், ஊக்குவிக்கவும் பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம், அக்டோபர் 2, 2016ல் இயற்றப்பட்டதாகவும், இதற்காக நவம்பர் 2017ல், குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஒரு தடைப் பிரிவு உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது லாலு பிரசாத், நிதீஷ் குமார், காங்கிரஸ் இடம்பெற்றிருந்த மகாகத்பந்தன் கூட்டணி தான் ஆட்சியில் இருந்தது குறிப்பிடதக்கது.

இதனை மறைத்து நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி பீகாரில் மது விலக்கு கொண்டு வந்ததாக தவறான தகவலை சுமதி மேகவர்ணம் என்பவர் பரப்பிவருகிறார்.
முடிவு:
எனவே, பீகாரில் பாஜக - நிதீஷ் குமார் கூட்டணி ஆட்சியில் வறுமை 5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், மது விலக்கு கொண்டு வந்ததாகவும் பாஜக மகளிரணி சமூக ஊடக மாநில அமைப்பாளர் சுமதி மேகவர்ணம் கூறுவது முற்றிலும் தவறான தகவலாகும்.