யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த பெண் ஒருவர் பாஜகவினர் தாக்கியதாக கூறி தலையில் போலியாகக் கட்டுப்போட்டு நாடகமாடியதாகப் பரவும் இந்த வீடியோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தது அல்ல. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள SKMCH மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ.
பரவிய செய்தி
பாஜக வினர் என்னை தாக்கி மண்டையை உடைத்து விட்டனர் என பொய் கட்டு போட்டு நடித்த மம்தா கோஷ்டி
தலை கட்டை பிரித்து அது பொய் என காட்டி உண்மையில் மண்டையை பொளந்த பாஜக சிங்க பெண்கள் 
விரிவான விளக்கம்
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த பெண் ஒருவர் பாஜகவினர் தாக்கியதாக கூறி தலையில் போலியாகக் கட்டுப்போட்டு நாடகமாடியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
தீதிக்கே டஃப் கொடுத்து நாடகமாடிய திரிணாமுல் பெண் தொண்டர்.. நேரலையிலேயே அம்பலமாகிய பொலி கட்டு..#KathirNews #TrinamoolCongress #WestBengal pic.twitter.com/xwBIRUnlHl
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியில் ஹிந்தியில் எடுதப்பட்டிருந்த வார்த்தையை, தமிழில் மொழி பெயர்த்து பார்த்தோம். அப்போது "மௌரியா த்வஜ் எக்ஸ்பிரஸ்" என்ற வார்த்தையை கண்டோம். இதை வைத்து தேடியபோது, மௌரியா த்வஜ் எக்ஸ்பிரஸின் யூடியூப் கணக்கை பார்க்கமுடிந்தது.
அதில் மே 06, 2026 அன்று பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், அது பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள SKMCH மருத்துவமனையைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது மௌரியா த்வஜ் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிருபரால் பதிவு செய்யப்பட்டது என்றும், தற்போது இது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தது என்ற தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடியப் போது, Crime Sach Khabar என்ற பேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 28, 2026 அன்று பரவி வரும் வீடியோவில் உள்ள screenshot உடன் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் முசாஃபர்பூரில் உள்ள SKMCH மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் உதவியாளருக்கும், ஒரு நோயாளியின் குடும்பத்தினருக்கும் இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த பெண் ஒருவர் பாஜகவினர் தாக்கியதாக கூறி தலையில் போலியாகக் கட்டுப்போட்டு நாடகமாடியதாகப் பரவும் இந்த வீடியோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தது அல்ல. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள SKMCH மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.