யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024ல் பிரதமர் கன்னியகுமாரிக்கு வந்தபோது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதை தற்போது நடந்தது போல் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
அண்ணாமலையின் எதிர்கால வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பொன்.ரா..
அட பாவமே..

விரிவான விளக்கம்
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நூற்றாண்டுகள் பழமையான தூக்குப் பாலத்திற்கு பதிலாக ரூ.535 கோடி செலவில் புதிய செங்குத்து - தூக்கு ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பழைய தூக்குப் பாலம் போல அல்லாமல், லிஃப்ட் போன்று செயல்படும். கடலில் இருந்து சுமார் 17 மீட்ட உயரத்தில் கட்டப்பட்டு, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள இந்த பாலத்தை பிரதமர் மோடி, அண்மையில் திறந்து வைத்தார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்டதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்ட் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
அண்ணாமலையின் எதிர்கால வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பொன்.ரா..
அட பாவமே.. pic.twitter.com/pITikKg4mv
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்ட் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது புதிய தலைமுறை செய்தி ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில், மே 30, 2024 அன்று அந்த நியூஸ் கார்ட் பதிவிடப்பட்டிருந்தை காணமுடிந்தது. அதில் "கன்னியாகுமரி: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுப்பு. பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திரும்பிச் சென்றார் பொன்.ராதாகிருஷ்ணன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அண்மையில் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் பரவி வரும் நியூஸ் கார்டில் கன்னியாகுமரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#JUSTIN | பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு#PMModi | #Kanniyakumari | #BJP | #PonRadhakrishnan pic.twitter.com/TU0YjKVG1I
மேலும் இது குறித்து தேடி பார்த்தோம். அப்போது 2024ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி TIMES OF INDIAவின் இணையதள பக்கத்தில், இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு பிரதமர் மோடி தியானம் செய்ய வந்ததாகவும், அப்போது அவரை வரவேற்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்ததாகவும், ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணங்களை காட்டி அவருக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால் புறப்பட்டு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் தினகரன் நாளிதழின் இணையதள பக்கத்தில், மே 30, 2024 அன்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ”அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடு குறித்து பார்வையிடுவதற்கு வந்ததாக பொன் ராதாகிருஷ்ணன் பதிலளித்ததாகவும், அரசியல் சார்ந்த யாரும் உள்ளே செல்ல அனுமதி கொடுக்காத காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு :
பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் அனுமதி மறுப்பு என்று பரவி வருவது பழைய செய்தியாகும்.