யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் செய்திகளுக்கு திருச்செந்தூர் கோவில் நிர்வாகமும், குருவாயூர் தேவசம் போர்டு மக்கள் தொடர்பு அலுவலகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குட்டியானை ஒன்று மகிழ்ச்சியில் நடனமாடுவதாகப் பரவும் இந்த வீடியோ கடந்த 2024-ல் இருந்தே பல சமூக ஊடகப்பக்கங்களில் பரவி வந்துள்ளதையும் காண முடிகிறது.
பரவிய செய்தி
குருவாயூர் கோயிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஒரு குட்டி யானையை பரிசாக அளித்தது.... அது பாடல்களுக்கு நடனமாடுவதை ரசித்து ஆடுகிறது. தாளத்தில் ஏற்படும் மாற்றங்களுக்காக அது எடுக்கும் வெவ்வேறு அடிகளைப் பாருங்கள்!!! முற்றிலும் அருமை

விரிவான விளக்கம்
கேரளா மாநிலத்தை சேர்ந்த குருவாயூர் கோயிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஒரு குட்டி யானை பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அது பாடல்களுக்கு ஏற்றவாறு ரசித்து நடனமாடுவதாகவும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
குருவாயூர் கோயிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஒரு குட்டி யானையை பரிசாக அளித்தது.... அது பாடல்களுக்கு நடனமாடுவதை ரசித்து ஆடுகிறது. தாளத்தில் ஏற்படும் மாற்றங்களுக்காக அது எடுக்கும் வெவ்வேறு அடிகளைப் பாருங்கள்!!! முற்றிலும் அருமை❤️ pic.twitter.com/V4Y6CrIj9m
உண்மை என்ன?
முதலில் கேரளாவில் இருந்து குட்டி யானை ஒன்று திருச்செந்தூர் கோயிலுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளதா என செய்தி வெளியாகியுள்ளதா என்று கூகுளில் தேடி பார்த்தோம். அப்படியான எந்த செய்தியும் வெளியானதை பார்க்கமுடியவில்லை.
இதையடுத்து பரவி வரும் வீடியோவில் VOICE OF THRISSUR என்று வாட்டர் மார்க் இருந்ததை பார்க்கமுடிந்தது. அதை வைத்த அந்த வீடியோவை தேடினோம். அப்போது VOICE OF THRISSUR என்ற முகநூல் பக்கத்தில் ஆகஸ்ட் 8,2024 அன்று பரவி வரும் வீடியோ இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் இந்த இசையைக் கேட்டா யானை கூட ஆடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடியபோது, டிசம்பர் 18,2024 அன்று village walker என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. எனவே இந்த வீடியோ 2024 முதலே பரவி வருவதை உறுதி செய்ய முடிந்தது.
இதை மேலும் உறுதி செய்ய, திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதே போல் குருவாயூர் தேவசம் போர்டு மக்கள் தொடர்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போதும், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று தெரிவித்தனர்.
முடிவு:
நம் தேடலில், “குருவாயூர் கோவிலால், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட குட்டி யானை” எனப் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பது தெரியவந்தது. மேலும் இந்த வீடியோ கடந்த 2024-ல் இருந்தே பல சமூக ஊடகப்பக்கங்களில் பரவி வந்துள்ளதையும் காண முடிகிறது.