யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 07, 2025 அன்று ஆபரேசன் சிந்தூர்க்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பரவிய செய்தி
ஆபரேசன் சிந்தூர் குறித்து பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை - அஸ்வத்தாமன், பாஜக

விரிவான விளக்கம்
ஆதன் தமிழ் ஊடகத்தில் நவம்பர் 19 அன்று, பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அளித்த நேர்காணால் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் சரியாக 20:50வது நிமிடத்தில் ஆப்ரேசன் சிந்தூர் குறித்து பேசுகிறார். அப்போது ஆபரேசன் சிந்தூர் குறித்து பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன?
முதலமைச்சர் ஸ்டாலின் ஆபரேசன் சிந்தூர் குறித்து பேசிய கருத்துகளை ஊடகங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது ETV Bharat ஊடகத்தில் மே 10,2025 அன்று “ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி! 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மேலும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் டிஜிபி அலுவலகத்திலிருந்து காமராஜர் சாலை வழியே போர் நினைவுச் சின்னம் வரை மாபெரும் பேரணி நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து முதலமைச்சர் எக்ஸ் பக்கத்தில் இது குறித்து தேடியப் போது, மே 7 அன்று வெளியான பதிவை பார்க்கமுடிந்தது. அதில் "ராணுவத்துடனும், தேசத்துடனும் தமிழ்நாடு எப்போதும் உறுதியாக துணைநிற்கும்" என்று அவர் குறிப்பிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது.
Tamil Nadu stands with the Indian Army against terrorism. With our Army, for our nation. Tamil Nadu stands resolute.#OperationSindoor
முடிவு:
நம் தேடலில், “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 07, 2025 அன்று ஆபரேசன் சிந்தூர்க்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆபரேசன் சிந்தூர் குறித்து பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.