யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பிரதமரின் உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 400 ரூபாயும், சாதாரண வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளிகளுக்கு 300 ரூபாயும் மானியம் வழங்கப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
பிரதமரின் சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 400 ரூபாயும், சாதாரண வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளிகளுக்கு 300 ரூபாயும் ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
விரிவான விளக்கம்
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை ரூ.50 உயர்த்துவதாகக் கூறி ஒன்றிய அரசு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது..
இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமரின் சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 400 ரூபாயும், சாதாரண வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளிகளுக்கு 300 ரூபாயும் வழங்கப்படுவதாக பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அண்ணாமலை பேசியுள்ள இந்த வீடியோவை பலரும் “மோடி அவர்கள் சிலிண்டருக்கு 400 ரூபாய் மானியம் தருகிறார். நார்மல் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் தருகிறார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குரிப்பிட்டுள்ளப்படி 100 ரூபாய் மானியம் எப்போது தருவீர்கள்?“ என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசிள்ளதாகப் பரவும் இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது கடந்த 2024 மார்ச் 8 அன்று அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
சாதாரண வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் கொடுக்கப்படுகிறதா?
ஒன்றிய அரசின் தகவல்களின் படி, இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இல்லாத, சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் பயனாளர்கள் 22.61 கோடி பேர் உள்ளனர். கடந்த நிதி ஆண்டில் அவர்களுடைய மானியத்திற்காக செலவிடப்பட்ட தொகை என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டிருப்பது 231.39 கோடி ரூபாய் மட்டுமே. 2018-19 நிதி ஆண்டில் 31,539 கோடியாக இருந்த இந்த தொகை இப்போது வெறும் 231 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சராசரியாகப் பார்த்தால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 10 ரூபாய் மட்டுமே வருகிறது. எனவே இதனை உறுதி செய்ய சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் பயனாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டிலிருந்து மானியம் எவ்வளவு ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
விகடனில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், 2015-ம் ஆண்டு ஒரு சிலிண்டரின் விலை 998 ரூபாயாக உயர்ந்திருந்தபோதிலும், 563 ரூபாய் வரை மானியமாக வழங்கப்பட்டது. ஆனால் 2021-ம் ஆண்டில் 850 ரூபாய் வரை சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், மானியமாக 25 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் கடந்த 2021ல் இருந்து மானியம் 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
எனவே நேரடியாக, சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் பயனாளர் ஒருவரிடம், யூடர்ன் தரப்பிலிருந்து விசாரித்த போது அவருக்கு ஒரு சிலிண்டருக்கு 24 ரூபாய் 95 பைசா மட்டுமே மானியமாக வந்திருப்பதாகக் கூறி ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பியுள்ளார். அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

இதன் மூலம் சாதாரண வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் கொடுக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பிரதமரின் உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 400 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறதா?
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், ஒன்றிய அரசின் தரவுகளின் படி தற்போது 10.27 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர்.
இந்நிலையில் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு ரூ.400 மானியமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மே 2022 இல் PMUY பயனாளிகளுக்கு ஆண்டுக்கு (12 சிலிண்டர்களுக்கு) ரூ.200/- மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 2023 இல், இது ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 300 ரூபாயே மானியமாக தற்போது வரை வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை 2025 ஏப்ரல் 03 அன்று ஒன்றிய அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மூலம் உறுதிபடுத்த முடிகிறது.
இதன் மூலம் PMUY திட்ட பயனாளிகளுக்கு 400 ரூபாய் மானியம் வழங்கப்படுவதாக அண்ணாமலை கூறியுள்ள தரவுகள் தவறாவை என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், பிரதமரின் உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 400 ரூபாயும், சாதாரண வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளிகளுக்கு 300 ரூபாயும் மானியம் வழங்கப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.