யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாஜக அரசு வெளியிட்டுள்ள மசோதாவிலே மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டுதான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
’தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடு மசோதாவில், எங்குமே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படவில்லை’ - அண்ணாமலை.
விரிவான விளக்கம்
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ‘தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீட்டிற்கான’ மசோதா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 543ஆக இருக்கும் மக்களவை தொகுதிகள் 850ஆக அதிகரிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, மக்களவையில் பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு 2029ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும்.
இந்த தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகை அடிப்படையில் செய்யப்படுவதால், மக்கள்தொகையை கட்டுப்பாட்டிற்குள் வைத்து முன்னேற்றம் அடைந்த தென் மாநிலங்களை தண்டிக்கும் வகையில் இருப்பதாக சொல்லி, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற தென் மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ‘தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடு மசோதாவில், எங்குமே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படவில்லை’ என்று கூறினார்.
#WATCH | Chennai | On Tamil Nadu CM MK Stalin's video message on delimitation, BJP leader K Annamalai says, "Very unfortunate! The kind of language the Chief Minister uses in that video. He is saying that Tamil Nadu will go back to the 1960s, threatening the PM. Very unfortunate,… pic.twitter.com/18QrRVcN8F
உண்மை என்ன?
இது குறித்து, தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுகான ஒதுக்கீடு பற்றி ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 131 சட்டத்திருத்த மசோதாவில் தேடினோம்.

அதில், தொகுதி மறுவரையறை ஆணையம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மக்களவை தொகுதிகளையும், ஒவ்வொரு மாநிலத்திற்குமான சட்டமன்ற தொகுதிகளையும் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யும் (delimit them on the basis of the latest census figures) என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 82, அடுத்த தொகுதி மறுவரையறை என்பது 2026க்கு பின்னர் நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இந்த சட்டத்திருத்த மசோதாவில் இந்த சரத்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால், 2026-27 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு முன்பான மக்கள்தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்படும் நிலை உள்ளது. அதாவது கடைசியாக நடத்தப்பட்ட 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளைக் கொண்டே தொகுதி மறுவரையறை செய்யப்படும்.

மேலும், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்று வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மையில் தொகுதி மறுவரையறையின் போது ஒவ்வொரு மாநிலமும் தற்போது இருக்கும் தொகுதிகளில் 50 சதவீத அளவு உயர்வு பெறும் என்று அமித் ஷா உறுதியளித்துள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத உயர்வு இருக்கும் என்று வரைவு மசோதாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
பாஜக அரசு வெளியிட்டுள்ள மசோதாவிலே மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டுதான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதனை மறைத்து அண்ணாமலை ஊடகங்களில் அப்பட்டமான பொய்யை பரப்பி வருகிறார்.
முடிவு:
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மசோதாவில் எங்கும் சொல்லப்படவில்லை என்று அண்ணாமலை பொய்யான தகவலை கூறிவருகிறார்.