யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் 161 கோவில்கள் இடிக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்லும் தகவல் எந்த ஆதாரமும் இல்லாமல் 2022லிருந்தே பரப்பபட்டு வருகிறது. மேலும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்ற உத்தரவின் படி தமிழ்நாட்டில் கோவில்கள் மட்டுமல்லாது தேவாலயங்கள் மற்றும் மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளன.
பரவிய செய்தி
No of religious places bulldozed in TN by the DMK govt
Temples – 161
Churches – Unknown
Masjids – Unknown
So there are no churches or masjids built illegally? No. It's just that the DMK is against Hindus, says @annamalai_k
Hindus will punch the final nail in DMK’s coffin

விரிவான விளக்கம்
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர்களை சந்திப்பு வீடியோவை பதிவிட்டு, திமுக அரசால் தமிழ்நாட்டில் இடிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டுருந்தனர். அதில் தமிழ்நாட்டில் 161 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தேவாலயங்கள், மசூதிகள் அகற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் பதிவிடப்பட்டுள்ள அண்ணாமலையின் வீடியோ, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட தேவாலயங்களோ, மசூதிகளோ இல்லையா என்று கேள்வி எழுப்பிருந்தார்.
No of religious places bulldozed in TN by the DMK govt
Temples – 161
Churches – Unknown
Masjids – Unknown
So there are no churches or masjids built illegally? No. It's just that the DMK is against Hindus, says @annamalai_k
Hindus will punch the final nail in DMK’s coffin🗿🔥 pic.twitter.com/OpOCdKdA2m
உண்மை என்ன?
முதலில் தமிழ்நாட்டில் 161 கோவில்கள் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல் குறித்து தேடினோம். 2022ஆம் ஆண்டிலிருந்தே திமுக ஆட்சியில் இடிக்கப்படும் 161 வது கோயில் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் எந்த ஆதாரமும் குறிப்பிடாமல் பகிரப்பட்டு வந்திருக்கின்றன.

மேலும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆதரவு இணையதளம் ஒன்றிலும் ஜனவரி 21, 2022 அன்று ”ஸ்டாலின் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 161வது கோயில் இடிக்கப்பட்டுள்ளது” என்று ஆதாரம் எதையும் குறிப்பிடாமல் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 2025 வரை 161 கோயில்கள் இடிக்கப்பட்டது என்று கூறிய நிலையில், 2022-லிருந்தே இதே தகவல் எண்ணிக்கை மாறாமல் பரப்பபட்டு வருவதை கவனிக்க முடிகிறது. 161 கோயில்களின் பட்டியல் குறித்து தேடியதில் எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. அண்ணாமலையும் எந்த ஆவணத்தின் அடிப்படையில் 161 என்ற எண்ணிக்கையை சொல்கிறார் என்பதைக் குறிப்பிடவில்லை. ஆதாரம் இருந்தால் அவர்தான் வெளியிட வேண்டும்.
அப்போது ஆதாரப்பூர்வ தகவல்களும் இல்லை. மாறாக Times Of India ஊடகத்தில் மார்ச் 04,2025 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட மூன்று கோயில்கள் மற்றும் மூன்று கடைகளை அதிகாரிகள் இடித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் Times Of India ஊடகத்தில் மார்ச் 01, 2025 அன்று சென்னை டி.நகரில் உள்ள மாம்பலம் கால்வாயின் அகலத்தில் கிட்டத்தட்ட 70% ஆக்கிரமிப்பு செய்ததற்காக ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான இரண்டு கோயில்கள் இடிக்கப்பட்டன என்று செய்தி வெளியாகியிருந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டில் சர்ச் அல்லது மசூதி இடிக்கப்பட்ட செய்தி குறித்து தேடினோம். தினமலர் ஊடகத்தில் டிசம்பர் 09, 2021 அன்று, “ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 'சர்ச்' நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பென்னலுார் கிராமத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் Organiser ஊடகத்தில், செப்டம்பர் 17, 2024 “Tamil Nadu: Illegal church built on water body in Villupuram District demolished following court orders” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகம்பட்டில் ராகவன் கால்வாயில் கட்டப்பட்ட சட்டவிரோத தேவாலயம், நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, செப்டம்பர் 16 அன்று இடிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடந்துள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது Times Of India ஊடகத்தில் ஜூலை 23, 2024 அன்று ”503 illegal religious structures razed in a month: Govt to HC” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் அகமதாபாதில் பொது இடங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மொத்தம் 503 மதக் கட்டமைப்புகள் , கடந்த மாதத்தில் மாநிலம் முழுவதும் அகற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுமட்டுமில்லாமல் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 45 கோவில் அகற்றப்பட்டுள்ளது.

முடிவு:
எனவே, தமிழ்நாட்டில் 161 கோவில்கள் இடிக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்லும் தகவல் 2022 லிருந்தே எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட காரணத்திற்காகவும், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காவும், சட்ட விரோதமாக கட்டப்பட்டதற்காகவுமே இதுவரை நீதிமன்ற உத்தரவின் படி தமிழ்நாட்டில் கோவில்கள் மட்டுமல்லாது தேவாலயங்கள் மற்றும் மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளன.