யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக 2023-ல் வெளியிடப்பட்ட அரசாணை மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளது. மீண்டும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வக்ஃப் வாரியம் செயல்படும் என்றே ஆந்திர அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவையே வக்ஃப் சொத்துக்கள் எனப்படுகிறது. இதனைக் கண்காணிக்க 1954-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இச்சட்டத்தில் திருத்தம் செய்ய சில மாதங்களுக்கு முன்னர் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மக்களவையில் ‘வக்ஃப் (திருத்தம்) மசோதா 2024’-ஐ தாக்கல் செய்தது. முஸ்லிம்களிடமிருந்து வக்ஃப் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே பாஜக இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதாக இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான மாநில அரசு வக்ஃப் வாரியத்தைக் கலைத்து அரசாணை வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தி பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் ’Times Now’ ஊடகத்தில் வெளியான செய்தி மேற்கோள் காட்டப்படுகிறது.
உண்மை என்ன?
ஆந்திர மாநிலத்தில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதாகப் பரவும் செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்ட அரசாணை கடந்த 1-ம் தேதி ANI எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதாக எந்த தகவலும் இடம் பெறவில்லை. மாறாக முந்தைய ஆட்சிக்காலத்தில் வக்ஃப் வாரிய உறுப்பினர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைதான் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
ஜெகன் மோகன் தலைமையிலான கடந்த ஆட்சியின் போது, வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டது (G.O.Ms.No.47). இதனை எதிர்த்து 13 ரிட் மனுக்கள் ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், வக்பு வாரிய தலைவர் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், வக்ஃப் வாரியம் செயல்படாமல் இருந்த நிலையில், முந்தைய அரசாணையைத் திரும்பப் பெற்று புதிய அரசாணை ஒன்றை சந்திரபாபு தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது.
‘Times Now’ ஊடகத்தின் செய்தியை பாஜகவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, பரவக் கூடிய இதே மாதிரியான தகவலை பதிவிட்டுள்ளார். அதற்கு ஆந்திர மாநில அரசின் அதிகாரப் பூர்வ உண்மை கண்டறியும் குழு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதிலும் மேற்கண்ட தகவலை உறுதி செய்ய முடிகிறது. மேலும், இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வக்ஃப் வாரியம் விரைவில் அமைக்க ஆந்திர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து வக்ஃப் வாரியம் என்ற முறையையே ஆந்திர அரசு கலைக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.
வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக முந்தைய ஜெகன் மோகன் அரசு வெளியிட்ட அரசாணை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், அதனை தற்போதைய அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஆனால், வக்ஃப் வாரியமே மொத்தமாகக் கலைக்கப்பட்டுவிட்டது போல் தவறான செய்தி பரப்பப்படுகிறது.
முடிவு:
ஆந்திராவில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதாகப் பரவும் செய்தி திரிக்கப்பட்டுப் பரப்பப்படுகிறது. வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக 2023-ல் வெளியிடப்பட்ட அரசாணை மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளது. மீண்டும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வக்ஃப் வாரியம் செயல்படும் என்றே ஆந்திர அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
