யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறொரு தளத்தில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்றும், இதற்கும் ஜபல்பூர் படகு விபத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்றும் ஜபல்பூர் ஆட்சியர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பரவிய செய்தி
மத்திய பிரதேச படகு விபத்தில் 4 வயது மகனை கட்டி அணைத்தபடி உயிரிழந்த தாய்
தந்தை, மகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், உடல்களை பார்த்து கதறி அழும் காட்சிகள் இதயத்தை நொறுக்குவதாய் உள்ளது.

விரிவான விளக்கம்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஏப்ரல் 30 அன்று நர்மதை ஆற்றின் மீதான பர்கி அணை நீர்த்தேக்கத்தில், திடீரென வானிலை மாறி, மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் அம்மாநில சுற்றுலாத்துறை இயக்கிய சொகுசு படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் இது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், படகு விபத்தின் மீட்புப் பணியின் போது 4 வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாயின் உடல் மீட்கப்பட்டது என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு APB Nadu, தினமலர், News Tamil 24x7 போன்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
முதலில் ஜபல்பூர் படகு விபத்தில் 4 வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் என்று ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது Times Of India ஊடகத்தில், இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் விடுமுறையை கழிக்க டெல்லியிலிருந்து வந்திருந்த 39 வயதான மெரினா மாஸ்ஸி மற்றும் அவரது 4 வயது மகன் திரிஷான் ஆகியோர் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்ததாகவும், தாய் தனது மகனை மார்போடு அணைத்தப்படி உயிரிழந்தாக மீட்பாளர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு மே 01, 2026 அன்று இந்த புகைப்படம் குறித்து பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறொரு தளத்தில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்றும், இதற்கும் ஜபல்பூர் படகு விபத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தால், பரவி வரும் புகைப்படத்தை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் புகைப்படம், 96.2% AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

முடிவு:
எனவே, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நிகழ்ந்த படகு விபத்தில், 4 வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாயின் உடல் மீட்கப்பட்டதாக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் உண்மையானதல்ல. இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.