யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
நிதி ஆயோக் கூட்டம்.. ஆரம்பமான ஒரு மணிநேரத்தில்.. முடிவதற்கு முன்பு ஒரு மணிநேரத்தில்..
விரிவான விளக்கம்
நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடியும், தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டு இரண்டு புகைப்படங்களை ஒப்பீடு செய்து, புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. மேலும் பரவி வரும் அப்பதிவுகளில் “நிதி ஆயோக் கூட்டம் ஆரம்பமான ஒரு மணிநேரத்தில் மற்றும் முடிவதற்கு முன்பு ஒரு மணிநேரத்தில்” என்றும் குறிப்பிட்டும் பரப்பப்பட்டு வருகிறது.
நிதி ஆயோக் கூட்டம்🔥💥
Starting 1 Hour Ending 1Hour https://t.co/DqTexYzBpE pic.twitter.com/9Bin0coBtQ
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இவை உண்மையான புகைப்படங்கள் அல்ல என்பதை அறிய முடிந்தது.
கடந்த 2025 மே 25 அன்று “Money Control” ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் இந்தியாக் கூட்டணியில் உள்ள முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கோட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துக்கொண்ட காட்சிகள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் அருகே சென்று பேசுவதைப் போன்றே காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
#WATCH | From MK Stalin to Revanth Reddy: Prime Minister Narendra Modi meets INDIA Bloc CMs At NITI Meet#NarendraModi #NITIAayog #MKStalin #RevanthReddy #HemantSoren pic.twitter.com/bT2N9fwzEJ
இதே போன்று, “Money Control“ இணையப் பக்கத்திலும், “நிதி ஆயோக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் வரிகளில் 50% பங்கு மற்றும் கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துக்கொண்டது போன்ற புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து “The Hindu”, “Newsdrum“ உட்பட மற்ற ஊடகங்களிலும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. எதிலும் பரவி வரும் புகைப்படங்களில் இருப்பது போன்று பிரதமர் மோடியின் கால்களில் முதல்வர் ஸ்டாலின் விழுந்து வணங்குவது போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை.
எனவே பரவி வரும் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவே அது குறித்து, “Decopy“ இணையப்பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில் அவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது.

முடிவு:
நம் தேடலில், கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்வர் சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.