யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
Chennai book fair இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பரவி வரும் புகைப்படத்தில் Gemini AI logo இடம்பெற்றுள்ளதையும் காணமுடிந்தது.
பரவிய செய்தி
சென்னை புத்தகக் கண்காட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், எழுத்தாளருமான திரு.ம.வெங்கடேசன் அவர்கள் எழுதிய “திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்” புத்தகத்தின் விளம்பரத்தை, தேசவிரோத, பிரிவினைவாத கும்பலின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மறைத்தது கருத்துச் சுதந்திரம் மற்றும் எழுத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.

விரிவான விளக்கம்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் 49வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 08 தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை நந்தனம் திடலில் மிகப் பெரிய அளவில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டித் துவங்கி வைத்தார்.
இந்நிலையில் பாஜக துணை தலைவரும், எழுத்தாளருமான ம.வெங்கடேசன் எழுதிய “திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்” புத்தகத்தின் விளம்பரத்தை புத்தக கண்காட்சியின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டதாக ஹெச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுருந்தார்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், எழுத்தாளருமான திரு.ம.வெங்கடேசன் அவர்கள் எழுதிய “திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்” புத்தகத்தின் விளம்பரத்தை, தேசவிரோத, பிரிவினைவாத கும்பலின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மறைத்தது கருத்துச் சுதந்திரம்… pic.twitter.com/YgNjLjFmIB
உண்மை என்ன?
ஹெச்.ராஜா பதிவிட்ட இந்த புகைப்படங்களை கூர்ந்து கவனித்தால், புகைப்படத்திற்கு கிழே, கூகுள் ஜெமினி லோகோ இடம்பெற்றுள்ளதை தெளிவாக காணமுடிந்தது. இதிலிருந்தே இந்த புகைப்படங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக உறுதி செய்யமுடிந்தது.

இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடிப்பார்த்தோம். அப்போது chennai book fair-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 09 அன்று, ஒரு பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் பரவி வரும் புகைப்படத்தை பதிவிட்டு, ”சென்னை புத்தகக் காட்சியில் இல்லாத நுழைவு வாயில் ஒன்றை AI மூலம் சித்தரித்து தவறான செய்தியை விஷமிகள் பரப்பி உள்ளார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, சென்னை புத்தக கண்காட்சியின் நுழைவு வாயில் என்று பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா பரப்பும் புகைப்படம் போலியானது. இது குறித்து chennai book fair இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.