YouTurn

குஜராத் மாநிலத்தில் தமிழ்ப் பள்ளி இயங்குகிறதா? உண்மை என்ன?

குஜராத் மாநிலத்தில் தமிழ்ப் பள்ளி இயங்குகிறதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

அந்த தமிழ்ப் பள்ளி 2020ம் ஆண்டே மூடப்பட்டுவிட்டது. மேலும், தற்போது குஜராத் அரசு தரப்பில் தமிழ் பாடப்புத்தகம் அச்சடிக்கப்படுவதில்லை.

பரவிய செய்தி

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில், அரசு உதவி பெறும் ஒரு தமிழ் மேனிலைப் பள்ளியும், எட்டு அரசு தமிழ் ஆரம்பப் பள்ளிகளும் உள்ளன.

Facebook link

விரிவான விளக்கம்

மும்மொழிக் கொள்கையைத் திட்டத்தால் (புதிய கல்விக் கொள்கை) தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவர்கள் படிக்க நேரிடுமென பாஜக மற்றும் வலதுசாரிகளால் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாகக் குஜராத் மாநிலத்தில் இயங்கக்கூடிய தமிழ் மேல்நிலைப்பள்ளி என்றும், அப்பள்ளியில் உள்ள தமிழ்ப் புத்தகம் என்று புகைப்படம் ஒன்று பரப்பப்படுகிறது. 




உண்மை என்ன?

‘அகமதாபாத் தமிழ் மேனிலைப்பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பரவக் கூடிய படத்தில், அப்பள்ளி ‘மணிநகர் (கிழக்கு)’ பகுதியில் அமைந்துள்ளதாக உள்ளது. மேலும், ’அகமதாபாத் தமிழ் வளர்ச்சி கல்வி அறக்கட்டளை’ மூலம் நிர்வகிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

படத்தில் உள்ள பள்ளி பெயரைக் கொண்டு Google map-ல் தேடிய போது, இப்பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. மேற்கொண்டு இது தொடர்பாக தேடியதில், 2020 செப்டம்பர் மாதம் வெளியான செய்திகளைக் காண முடிந்தது. 

image.png

ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி சிறுபான்மை பள்ளி இயங்குவது இயல்பான ஒன்றுதான். தமிழ்நாட்டிலும் அப்படியான பள்ளிகள் இயங்குகின்றன. இது தொடர்பாக யூடர்னில் முன்னரே கட்டுரை வெளியிட்டுள்ளோம். அப்படி அகமதாபாத், மணிநகரில் தமிழர்களுக்காகச் செயல்பட்டு வந்த தமிழ்ப் பள்ளி புகைப்படத்தைத் தான் தற்போது பரப்புகின்றனர். 

தமிழ் மாணவர்கள் தங்களின் தாய் மொழியில் படிப்பதற்காக 1971ம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதனை ’அகமதாபாத் தமிழ் வளர்ச்சி கல்வி அறக்கட்டளை’ நிர்வகித்து வந்துள்ளது. இப்பள்ளியில் குறைவான மாணவர்கள் இருப்பதாகக் காரணம் காட்டி எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டுவிட்டதாக ‘Ahmedabad Mirror’ ஊடகத்தில் 2020, செப்டம்பர் மாதம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

image.png

இதற்கு முன்னதாக தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு வைப்பது அம்மாநில அரசால் நிறுத்தப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக மாணவர்கள் ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் காரணம் காட்டி பள்ளி மூடப்பட்டுள்ளது. 

பள்ளியை மீண்டும் திறக்க வேண்டி மாவட்ட கல்வி அலுவலகம், காந்தி நகரில் உள்ள கல்வி வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக எனப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், பள்ளி நடத்துவதற்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறி மீண்டும் பள்ளியைத் திறக்க கோரி அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குஜராத் முதல்வரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

image.png

இத்தனை முயற்சிகளுக்குப் பின்னராவது பள்ளி திறக்கப்பட்டதா என்பதை அறிவதற்காக ‘அகமதாபாத் தமிழ்ச் சங்க’ மூத்த நிர்வாகி ராஜா என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியதில், அங்கு தற்போது தமிழ்ப் பள்ளி இயங்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

மேற்கொண்டு தமிழ் மொழியில் ’குஜராத் மாநில பள்ளி பாடநூல் நிறுவனம்’ புத்தகம் ஏதேனும் வெளியிடுகிறதா என்பது குறித்தும் தேடினோம். அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குஜராத்தி, ஆங்கிலம், இந்தி, மராத்தி மொழிப் புத்தகங்களே உள்ளன. தமிழ் பாடப்புத்தகம் எதுவும் இடம் பெறவில்லை. குஜராத் அரசு சார்பில் தற்போது தமிழ்ப் பாடப் புத்தகம் எதுவும் வெளியிடப்படுவதில்லை என்று ராஜாவும் நம்மிடம் பேசுகையில் விளக்கினார்.

முதலில் இப்பள்ளி குஜராத் மாநில அரசு முன்வந்து தொடங்கப்பட்ட பள்ளி கிடையாது. இது அங்குள்ள தமிழ்ச் சங்கத்தால் தொடங்கப்பட்டது. அடுத்ததாக இப்பள்ளியை அம்மாநில அரசு முழுவதுமாக 2020ம் ஆண்டே மூடிவிட்டது. மூடிய ஒரு பள்ளியின் படத்தைக் கொண்டு குஜராத்தில் தமிழ்ப் பள்ளி இயங்குவதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இவற்றைக் கொண்டு பார்க்கையில் புதிய கல்விக் கொள்கை வந்த பிறகே இப்பள்ளி மூடப்பட்டுள்ளது.

முடிவு: 

குஜராத்தில் தமிழ்ப் பள்ளி செயல்படுவதாகவும் தமிழ்ப் பாடப் புத்தகம் அம்மாநில அரசால் வழங்கப்படுவதாகவும் பரப்பப்படும் புகைப்படம் குறித்த தகவல் தவறானது. அந்த தமிழ்ப் பள்ளி 2020ம் ஆண்டே மூடப்பட்டுவிட்டது. மேலும், தற்போது குஜராத் அரசு தரப்பில் தமிழ் பாடப்புத்தகம் அச்சடிக்கப்படுவதில்லை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.