யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் சாப்பிட முடியாமல் மாணவர்கள் உணவை குப்பைத் தொட்டியில் வீசியப்போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தமிழ்நாட்டில் உள்ள அரசு நடந்தது போல் தவறாக பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
காலை உணவு திட்டம் குறித்து பல்வேறு அவதூறுகள் பரவி வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளி குழந்தைகள் உணவை குப்பையில் கொட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, இது தான் திமுக ஆட்சியின் காலை உணவு திட்டம் என்று அதிமுகவினர் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Komedy King Kavi என்ற ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த யூடியூப் பக்கத்தில், மார்ச் 15, 2026 அன்று Mid day meals என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து keywords மூலம் பரவி வரும் இந்த வீடியோ குறித்து தேடினோம். அப்போது தெலுங்கு ஊடகமான BNS Media ஊடகத்தில் ”Students throw away substandard food at Govt school in NTR district” என்ற தலைப்பில் மார்ச் 11,2026 அன்று பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது.

அதில் ஆந்திரா மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேவுனி செருவிலுள்ள எம்பிபி பள்ளியில், ”டொக்கா சீதம்மா மதிய உணவு திட்டம்” (Dokka Seethamma midday meal scheme) தரம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாகத் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாக மாணவர்களும் பெற்றோரும் குற்றம் சாட்டியுள்ளனர். உணவைச் சாப்பிட இயலாத நிலையில், மாணவர்கள் அதனைக் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, ஆந்திராவை ஆளும் கட்சியான தெலுங்கு தேசக் கட்சியின் பொதுச் செயலாளர் Lokesh Nara, தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்திருந்தார். அதில் இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில், உணவு நிறுவனம் மாற்றப்பட்டதாகவும், தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
I was alerted to the issue of poor food quality in a government school. We have acted immediately. A 3-member committee was formed, and based on their report, the food agency has been replaced, and subsequently the headmaster has been suspended.
We are strengthening oversight… https://t.co/bfYslxlJh0
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், பரவி வரும் வீடியோ ஆந்திரா மாநிலத்தில் எடுக்கப்பட்டது. இதை திமுக ஆட்சியில் காலை உணவு திட்டம் என்று குறிப்பிட்டு அதிமுகவினர் தவறாக பரப்பி வருகின்றனர்.
