யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“விதவை ஓய்வூதிய திட்டம்”, விதவைகளுக்கு மட்டுமானது அல்ல. இந்தத் திட்டம் விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், பிரிந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் அனைவருக்குமானது. இவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாதாந்திர நிதியுதவியாக ₹2,500 வழங்கப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு கடந்த 10 ஆண்டுகளாக 85,000 இஸ்லாமிய பெண்களுக்கு விதவை ஓய்வூதியம் வழங்கி வருவதாகவும், ஆனால் அவர்களின் கணவர்கள் அனைவரும் உயிருடன் உள்ளதாகவும் பதிவு ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது உள்ள டெல்லி முதல்வர் ரேகா குப்தா குழு இந்த ஊழலை அம்பலப்படுத்தியுள்ளதாகவும், இதனால் அரவிந்த கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மளைவிட பெரிய வித்தைகாரன்டோய் ஊபிஸ் மைண்ட் வாய்ஸ் 😁 https://t.co/ZP5yE6ICVO
உண்மை என்ன?
முதலில் டெல்லியில் வழங்கப்படும் விதவை ஓய்வூதிய திட்டம் குறித்து தேடி பார்த்தோம். அப்போது wcd. delhi. gov. in என்ற இணையதளப்பக்கத்தில் டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் (WCD) செயல்படுத்தப்பட்டு வரும் "விதவை ஓய்வூதிய திட்டம்" குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் விதவை ஓய்வூதிய திட்டம், விதவைகளுக்கு மட்டுமானது அல்ல. இந்தத் திட்டம் விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், பிரிந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் அனைவருக்குமானது. இவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாதாந்திர நிதியுதவியாக ₹2,500 வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மத அடிப்படையிலான திட்டமும் அல்ல.

மேலும் இது குறித்து தேடிய போது, The Hindu ஊடகப்பக்கத்தில் ஜூலை 1, 2025 அன்று, "Delhi Women’s Pension Scheme: 60,000 beneficiaries found ineligible" என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்த 60,000 பெண்கள் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. தகுதியற்றவர்கள் நீக்கப்பட்டு சுமார் 3.65 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது வழக்கமான ஓய்வூதியத்தைப் பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தகுதியற்றவர்களில் அனைத்து மத பெண்களும் அடங்குவர்.

முடிவு:
நம் தேடலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த போது 85,000 இஸ்லாமிய பெண்களுக்கு தவறாக ஓய்வூதியம் வழங்கப்பட்டதாகப் பாஜகவினர் மத வெறுப்புணர்வோடு தவறாக பரப்பி வருகின்றனர்.
