யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுதந்திர தினத்தன்று தேசியகீதத்தை தவறாகப் பாடிய பாஜகவினர் என்று கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
தேசிய கீதம் கூட தெரியாத சங்கிகள்..
விரிவான விளக்கம்
இந்தியா தனது 78ஆவது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15, 2024 அன்று கொண்டாடியது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தேசியகீதத்தை தவறாகப் பாடிய பாஜகவினர் என்று கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், வேகமாக தேசிய கீதம் பாடும் ஒருவர், தொடர்ந்து தவறாகப் பாடுவதையும், பின்னர் ஒரு கட்டத்தில் தேசியகீதத்தின் வரிகள் தெரியாமல் பாடுவதை நிறுத்துவதையும் காணமுடிகிறது.
இவ்வளவு தான் உங்க தேசபக்தி..
— Kovai Nithya (@KovaiNithya) August 15, 2024
சோதிக்காதிங்கடா சோதிக்காதிங்க🤦#IndependenceDay2024 pic.twitter.com/eonlGfKUNJ
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை வைத்து தேடிப் பார்த்ததில் (Google Reverse Image Search), இது கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறியமுடிந்தது.
‘Oneindia News’ யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ கடந்த 2021 ஆகஸ்ட் 16 அன்று “தேசிய கீதத்தை மறந்த சமாஜ்வாடி எம்பி எஸ்டி ஹசன்“ என்று பதிவிடப்பட்டிருந்தது.
இதே போன்று, பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு ‘Times of India’ ஊடகப் பக்கத்திலும் கடந்த 2021 ஆகஸ்ட் 16 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. "உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள மொராதாபாத்தில் சுதந்திரதினத்தன்று தேசியக்கொடி ஏற்றிய சமாஜ்வாதி கட்சி எம்பி எஸ்டி ஹசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தேசிய கீதத்தின் வரிகளை மறந்துவிட்டனர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது” என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் பரவி வரும் வீடியோவில் இருப்பவர்கள் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இது 2021ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், 'சுதந்திர தினத்தன்று தேசியகீதத்தை தவறாகப் பாடிய பாஜகவினர்' எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
