யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகாராஷ்டிராவின் பர்பானி பகுதியில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து ’குடியரசு சேனா’யால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்கு சேதம் விளைவித்த மகாராஷ்டிரா சிறுத்தை குட்டிகள் !!
மகாராஷ்டிரா காவல்துறையினரால் நன்றாக கவனிக்கப்பட்ட அந்த அருமையான காணொளி!!

விரிவான விளக்கம்
நீல நிற துண்டை கழுத்தில் அணிந்திருக்கும் ஒரு இளைஞரை போலீஸ் துரத்தித் துரத்தி அடிக்கும் வீடியோவை பதிவிட்டு, ‘கலவரத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரை மகாராஷ்டிரா காவல்துறையினர் அடிப்பதாக’ எழுதி ’எக்ஸ்’ தளத்தில் பாஜக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’Jansatta’ என்ற யூட்யூப் பக்கத்தில், ’பர்பானி பகுதியில் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டார், 40 நபர்கள் கைது செய்யப்பட்டனர்’ என்று இந்தியில் எழுதப்பட்ட தலைப்பில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் மேலும் தேடியதில், ’டைனிக் பாஸ்கர்’ என்ற செய்தித்தளத்தில் இதுபற்றிய செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் பர்பானி என்ற பகுதியில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி ரயில் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்த அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின் மாதிரி (Replica of the Constitution) சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலையின் ஓரங்கமான அரசியலமைப்பு புத்தகம் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து அதற்கு அடுத்த நாளான புதன்கிழமை அம்பேத்கரிய ஆதரவாளர்கள் ’பந்த்’ போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர். ஆனால் இந்த ‘பந்த்’ போராட்டம் வன்முறையாக மாறி கல்வீச்சு, தீ வைப்பு ஆகிய சம்பவங்களும் நடந்தது என்று குறிப்பிடப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில பகுதிகளில் தடியடியும் நடத்தப்பட்டது. பர்பானி பகுதியில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சார்ப்பில், ’சோபன் தத்தாராவ் பவார்’ என்பவர் தான் இதனைச் செய்ததாகவும், அவரை உள்ளூர் மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ”டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பேரன் ஆனந்தராஜ் அம்பேத்கர் தலைமையில் இயங்கிவரும் ’குடியரசு சேனா’ என்ற அமைப்பின் துணைத் தலைவர் ’விஜய் வாகோடு’ தலைமையில் 400க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது” என்று ’The Indian EXPRESS’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதிலிருந்து, வன்முறையில் முடிந்த இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய ’குடியரசு சேனா’ என்பது தெரியவருகிறது. அது சம்பந்தமான வீடியோவை, ’விசிக கட்சி மகாராஷ்டிராவில் கலவரத்தில் ஈடுபட்டது’ என்ற தவறான தகவலின் அடிப்படையில் பரப்புகின்றனர்.
முடிவு:
அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து ’குடியரசு சேனா’ தலைமையில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ‘விசிக கட்சியினர் வன்முறையில் ஈடுப்பட்டதாக’ தவறான பரப்புகின்றனர்.