யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
Artesian Condition என்னும் நிகழ்வுப்போக்கின் காரணமாக நிலத்தடி நீரை உயர் அழுத்தத்தில் தேக்கி வைத்திருக்கும் பாறைகள் உடைக்கப்பட்டதனால் ஏற்றப்பட்ட நீர் வெளியேற்றம் இது.
பரவிய செய்தி
மர்ம நிகழ்வு... ஜெய் சால்மரில் சரஸ்வதி நதி இருந்ததாக கூறப்படும் இடத்தில் போர் போடும்போது வெளியே வந்த நதி..

விரிவான விளக்கம்
தண்ணீர் பூமிக்குள் இருந்து பீரிட்டு வெளியேறி குளம் போல் சூழ்ந்துள்ள வீடியோவை பதிவிட்டு, ‘ஜெய் சால்மர் என்னும் பகுதியில் போர் போடும் போது சரஸ்வதி நதி வெளியே வந்தது’ என்று சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் செய்தி குறித்த keywords-களைக் கொண்டு தேடுகையில், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி ’TIMES OF INDIA’ வெளியிட்ட செய்தி கட்டுரையை காணமுடிந்தது.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் என்ற பகுதியில் உள்ள தாரகர் என்னும் கிராமத்தில், குழாய் கிணறு தோண்டும் போது இந்த சம்பவம் நடந்திருகிறது. 850 அடிகள் ஆழத்திற்கு குழாய் கிணறு தோண்டும் போது, தண்ணீரும் வாயுவும் வெடித்துக்கொண்டு வெளிவந்தது. தண்ணீர் மிக வேகமாக வெளியேறியதால் மிக குறுகிய நேரத்திலே சுற்றியிருந்த வயல்களில் குளம் போல் தேங்கிவிட்டது.

இதுபற்றி டாக்டர். நாராயண் தாஸ் என்னும் விஞ்ஞானி கூறும்போது, ‘Artesian Condition’ என்னும் நிகழ்வுப்போக்கின் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக விளக்குகிறார்.
நிலத்தடி நீர் தடித்த பாறை அடுக்களுக்கு இடையில் உயர்ந்த அழுத்தத்தில் இருக்கும் போது, அந்த நீர் lower elevation என்று சொல்லப்படகூடிய பகுதி வழியாக வெளியேறும். நீர் இரைப்பு இயந்திரத்தின் விசை இல்லாமலே இப்படி நிலத்தடி அழுத்தத்தின் காரணமாக நீர் வெளியேறுவதை Artesian Condition என்று சொல்வார்கள்.
ஆனால், மேற்கூறியபடி நீரை அதி அழுத்தத்தில் தேக்கி வைத்திருக்கூடிய தடித்த பாறைகள் உடைக்கப்பட்டால், அந்த நீர் வெடித்துக்கொண்டு வெளியேறும். அந்த நிலத்தடி நீர் பூமிக்கு வெளியே வடிந்து முடிக்க சில நாட்கள் ஆகலாம்.
வேத காலத்தில், இமய மலையில் தோன்றி அரேபிக் கடலின் கலக்கும் வகையில் சரஸ்வதி நிதி இருந்ததாகவும், புவியியல் மாற்றம் காரணமாக அந்த நிதி வற்றிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. சரஸ்வதி நதி வற்றவில்லை, அது ராஜஸ்தானில் இருக்கும் ’தார்’ பாலைவனத்திற்கு அடியில் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சிலர் நம்புகின்றனர். அதனால்தான், இந்த Artesian Condition என்னும் அறிவியல் பூர்வமான நிகழ்வை ‘பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதி வெளியே வந்திருப்பதாக’ திரித்து பரப்புகிறார்கள்.
முடிவு:
நிலத்தடிநீரை உயர் அழுத்தத்தில் தேக்கி வைத்திருக்கும் பாறைகள் உடைக்கப்பட்டதனால் ஏற்றப்பட்ட நீர் வெளியேற்றத்தை ‘பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதி வெளியே வந்திருப்பதாக’ திரித்து தவறாக பரப்பப்படுகிறது.