யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவில் இருக்கும் நபர் பாயல் ஜாதவ் என்னும் தொழில்முறை நடிகையாவார்.
பரவிய செய்தி
டெல்லியின் பொறுப்பு இப்பொழுதுதான் ஒரு சரியான நபரிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தாவான ரேகா குப்தாவின் பழைய வீடியோ. இப்போது இவர்தான் டெல்லியின் முதலமைச்சர். இனி எல்லாமே சரியாக இருக்கும். வீரமங்கை @GuptaRekhaDelhi

விரிவான விளக்கம்
டெல்லி ஒன்றிய பிரதேசத்திற்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக யார் டெல்லியின் முதல்வர் என்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்ற ரேகா குப்தா என்பவர் நேற்று (20/02/25) டெல்லி முதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த ரேகா குப்தா ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் பிரிவான ’அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP)’ அமைப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரேகா குப்தா தனது இளமைக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தபோது வாள்வீச்சு, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளை நிகழ்த்தும் போது பதிவுசெய்யப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், இன்ஸ்டாகிராமில் ’Payal Jadhav’ என்ற பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.

இந்த வீடியோவின் Description-ல் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ் நினைவைப் போற்றும் வகையிலும், அதிலிருந்து உத்வேகம் பெறும் பொருட்டும் இந்த தற்காப்புக் கலை முயற்சியை மேற்கொண்டதாகவும்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வீடியோ பிப்ரவரி 19 அன்று தான் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பாயல் ஜாதவ்’ என்னும் நபர் குறித்துத் தேடிய போது, அவர் ஒரு தொழில்முறை நடிகை என்பது செய்திகள் மூலமாகத் தெரியவருகிறது.
இதிலிருந்து இந்த வீடியோவில் இருக்கும் நபர் பாயல் ஜாதவ் என்னும் நடிகை என்பதும் இந்த வீடியோ சமீபகாலத்தில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
பாயல் ஜாதவ் என்னும் தொழில்முறை நடிகையின் அண்மைக்கால வீடியோவை டெல்லி முதல்வராகப் பதிவேற்ற ரேகா குப்தா-ன் பழைய வீடியோ என்று தவறாகப் பரப்புகிறார்கள்.