யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’நாங்கள் கீழே தள்ளிவிடப்படுவதால் எங்களுக்கு ஒன்றும் ஆகாது’ என்று ராகுல் காந்தி பேசியதை திரித்து "ஒருவரை கீழே தள்ளி விடுவதால் அவருக்கு ஒன்றும் ஆகாது" என்று தவறாக பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
"ஒருவரை கீழே தள்ளி விடுவதால் அவருக்கு ஒன்றும் ஆகாது"
அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்த துரோகங்கள் பற்றி கேள்வி எழுப்பிய பாஜகவின், எம்பியை கீழே தள்ளி மண்டையை உடைத்தது பற்றி போக்சோ குற்றவாளி ராகுல் திமிர் பேச்சு.

விரிவான விளக்கம்
’அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பதே காங்கிரசுக்கு ஃபேஷனாகிவிட்டது’ என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போராடினர். இந்தப் போராட்டத்தின் போது நாடாளுமன்ற நுழைவாயிலில் இரண்டு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக இரண்டு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயம் பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகக்களுக்கு பேட்டியளித்த போது, "ஒருவரை கீழே தள்ளி விடுவதால் அவருக்கு ஒன்றும் ஆகாது" என்று ராகுல் காந்தி பேசிதாக பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். மேலும், ராகுல் காந்தி ஒரு போக்சோ குற்றவாளி என்றும் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் தகவலை அடிப்படையாகக் கொண்டு, ‘gandhi pushed bjp mp’ என்ற keywords கொண்டு தேடியதில், இது பற்றி ANI செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியைக் காணமுடிந்தது.
அதன்படி, ராகுல் காந்தி தள்ளிவிட்டதால் தான் காயமடைந்ததாக குற்றம்சாட்டினார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சந்திர சாரங்கி. ராகுல் காந்தி இதனை மறுத்து பேசுகையில், “இது உங்கள் கேமராவில் பதிவாகியிருக்கும். நான் நாடாளுமன்ற நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயற்சித்தேன், அப்போது பாஜக உறுப்பினர்கள் என்னை தடுக்க முயற்சித்தார்கள், தள்ளிவிட்டார்கள், மேலும் என்னை மிரட்டினார்கள்” என்கிறார்.

தள்ளிவிடப்பட்டது பற்றி ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டபோது, “ஆம் இது நடந்தது, மல்லிகார்ஜுன கார்கே தள்ளிவிடப்பட்டார். ஆனால், தள்ளிவிடப்பட்டதால் நாங்கள் பாதிப்படையவில்லை” என்று பதிலளித்துள்ளார்.
’நாங்கள் கீழே தள்ளிவிடப்படுவதால் எங்களுக்கு ஒன்றும் ஆகாது’ என்று ராகுல் காந்தி பேசியதை திரித்து "ஒருவரை கீழே தள்ளி விடுவதால் அவருக்கு ஒன்றும் ஆகாது" என்று தவறாக பரப்புகின்றனர்.
மேலும், ராகுல் காந்தியை ’போக்சோ குற்றவாளி’ என்று சொல்வது குறித்து நமது ‘YouTurn’ தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். 2021 ஆம் ஆண்டு டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தகன அறைக்குள் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ராகுல் காந்தி அந்த சிறுமியின் குடும்பத்தை சந்தித்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இவ்வாறு, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக ராகுல் காந்தி மீது POCSO சட்டத்தின் பிரிவில் ஒர் வழக்கு பதியப்பட்டது.

இதனைத் திரித்து ராகுல் காந்தி சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி என்ற தொனியில் திரித்து பரப்புகின்றனர்.
மேற்கூறிய விவரங்களில் இருந்து, நாடாளுமன்ற நுழைவாயிலில் இரண்டு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளு பற்றி ராகுல் காந்தி பேசியதையும், அவர் மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கையும் திரித்துப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
மல்லிகார்ஜுன கார்கே தள்ளிவிடப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியதை பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கை பற்றி கூறியதாக திரித்து பரப்புகின்றனர். மேலும், அவர் மீது போடப்பட்டுள்ள போக்சோ வழக்கு பற்றியும் திரித்து பரப்புகின்றனர்.