யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டை வாட்ஸ் ஆப் செயலி மூலம் பெறலாம் என்று சொல்லப்படுவது உண்மையல்ல. வதந்தியாகும்.
பரவிய செய்தி
வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்!!!
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம்.
சேவையை பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு `Hai' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்

விரிவான விளக்கம்
’மன மித்ரா’ என்ற பெயரில் வாட்ஸ்ஆப் மூலம் பல்வேறு சேவைகளை ஆந்திர அரசு வழங்கி வருவதாகவும், அதில் ஒரு அங்கமாகத் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கான டிக்கெட்களை வாட்ஸ் ஆப் செயலி மூலமாகப் பெறலாம் என்றும், அதற்கு 9552300009 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றும் Whatsapp-ல் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த தகவல் குறித்து இணையத்தில் தேடியபோது, ’Oneindia’ செய்தித்தளத்தில் இது தொடர்பான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதில், ‘வாட்ஸ்-ஆப் மூலம் தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்யும் திட்டம் பரிசீலனையில் மட்டுமே உள்ளது, இது குறித்து எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளதாகவும், இந்த திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் முதற்கட்டமாக 161 அரசு சேவைகளை வாட்ஸ் ஆப் மூலம் பொதுமக்களுக்கு எளிய முறையில் வழங்குவதற்காக ’மன மித்ரா’ என்ற திட்டத்தை அம்மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கடந்த ஜனவரி 30 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக +919552300009 என்ற ஆந்திரப் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதேபோல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகளை வாட்ஸ் ஆப் மூலமாகப் பெறும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
இதற்கிடையில் மோசடி கும்பல் ஆந்திர மாநில அரசின் அரசு லோகோவை பயன்படுத்தி பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ‘வாட்ஸ் ஆப்-ல் தரிசன டிக்கெட் பெறும் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் கூட இதுவரை தொடங்கப்படவில்லை’ என்று விளக்கமளித்துள்ளது.
இதிலிருந்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட்களை வாட்ஸ் ஆப் செயலி மூலமாக பெறலாம் என்பது உண்மையல்ல, வதந்தி மட்டுமே என்பது தெளிவாகிறது.
முடிவு:
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டை வாட்ஸ் ஆப் செயலி மூலம் பெறலாம் என்று சொல்லப்படுவது உண்மையல்ல. வதந்தி மட்டுமேயாகும்.