யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குஜராத்தில் பெய்த கனமழை.. உதவிக் கரங்களை நீட்டிய குஜராத் முஸ்லீம்கள் எனத் தவறாக செய்தி வெளியிட்ட தினமலர்..!!
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதில் சமீப நாட்களாக குஜராத் மற்றும் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வராலாறு காணாத வெள்ளம் மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் பேரிடர் மீட்புக்குழுவினர் வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில், கனமழையைக் கூடப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவும் குஜராத் முஸ்லீம்கள் என்று தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்ததாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அவ்வீடியோவில் சில முஸ்லிம்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து வீடுகளில் உணவுகளை கொடுப்பதை பார்க்க முடிகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அந்த வீடியோ குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிந்தது.
பரவக்கூடிய வீடியோவில் ஒரு போர்ட் இருப்பதை கவனித்தோம். அதில், வங்கதேச மொழியில் எழுதி இருந்தது தெரியவந்தது. இதனைக் கொண்டு தேடியதில், இம்ரான் ஹுசைன்(Imran Husain) என்ற முகநூல் பக்கத்தில் பரவக்கூடிய இதே விடியோவை ஆகஸ்ட் 25ம் தேதி 2024 அன்று பதிவிட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
அதில் மதரஸா மாணவர்களின் இந்த செயல்கள் பற்றிய செய்திகள் எந்த சேனலிலும் ஒளிபரப்பப்படவில்லை, செய்தித்தாள்களிலும் வெளியிடவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அதே பதிவில் சிலர் இந்நிகழ்வு எங்கு நடந்தது என்ற கேள்விக்கு, "Students of Zakaria Harun Munsirhat Darul Uloom Madrasa மாணவர்கள் (Durbarpur Road, Munsirhat, Fulgazi Feni) தர்பார்பூர் சாலை, முன்சிர்ஹாட், ஃபுல்காசி ஃபெனியில் பகுதியில் உணவு பொருட்களை நீந்திச்சென்று வீட்டின் வாசலிலே கொடுக்கின்றனர். இப்படியொரு கட்சியை நான் என்வாழ்வில் முதன்முறையாகப் பார்த்தேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் கூறப்படும் முகவரியைக் கொண்டு தேடியதில் இது வங்கதேசத்தில் நடந்தது என்பது தெளிவாகத்தெரிகிறது.
மேலும், இதுக்குறித்து தேடியதில், வங்கதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய Protidiner Bangladesh என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி இதன் முழு வீடியோ பதிவிட்டிருப்பதை கவனித்தோம்.
இவற்றிலிருந்து இவை குஜராத் அல்லது ஆந்திராவில் நடந்தது கிடையாது என்பதை அறியமுடிகிறது. மேலும் தினமலர் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், சில முஸ்லிம்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து வீடுகளில் உணவுகளை கொடுக்கும் வீடியோ வங்கதேசத்தில் நடந்த ஓர் நிகழ்வு என்பதை அறிய முடிகிறது.
