யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2019ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள நகாஸ் சவுக் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடைபெற்ற போராட்டம் என்பது உறுதியாகிவுள்ளது.
பரவிய செய்தி
*உத்தரப்பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்!* *உடனடியாக சிகிச்சை!* *நாட்பட்ட முதுகு வலி, இடுப்பு வலி, கால் வலி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற••••**பிரபல மருத்துவர்கள்:**யோகி ஆதித்யநாத் ஜி மகராஜ்!!*

விரிவான விளக்கம்
முஸ்லிம் சமுதாயப் பெருமக்கள், செல்வந்தர்களால் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் நாடி, தங்கள் பகுதிகளில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவையே வக்பு சொத்துகள். அவை அசையும் சொத்துகளாகவும், அசையா சொத்துகளாகவும் இருக்கின்றன. வக்பு சட்டத்தில் பாஜக திருத்தங்களை கொண்டு வர இருந்தது. இந்த திட்டத்திற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
*உத்தரப்பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்!*
*உடனடியாக சிகிச்சை!*
*நாட்பட்ட முதுகு வலி, இடுப்பு வலி, கால் வலி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற••••*
*பிரபல மருத்துவர்கள்:*
*யோகி ஆதித்யநாத் ஜி மகராஜ்!!*🤷♂️🌹 pic.twitter.com/9P0rcsrgan
உண்மை என்ன ?
பரவி வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, Live Hindustan செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், "Gorakhpur: Two injured in stone pelting and lathi charge during protest against CAA" என்ற தலைப்பில் ஒரு செய்தியை காணமுடிந்தது. அதில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து மேலும் தேடி பார்க்கையில், உதயவாணி செய்தி ஊடகத்தின் இணையதள பக்கத்தில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக பெரிய போராட்டங்கள் நடைபெற்றதாகவும், காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டதாகவும்குறிப்பிடப்பட்டிருந்தன. அதே போல் 2019 டிசம்பர் 20ஆம் தேதி NEWS NATION-ன் யூடியூப் பக்கத்தில் Anti-CAA Protests: Clashes Between Police In Gorakhpur என்ற தலைப்பிலும் இது குறித்தான வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

முழுவதுமாக உறுதிப்படுத்த பரவி வரும் வீடியோ உள்ள இடத்தை, GOOGLE EARTH-ல் தேடி பார்த்தோம். பரவி வரும் வீடியோவில் உள்ள ஒரு கடையின் சிகப்பு நிற பெயர் பலகை, GOOGLE EARTH மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. அப்போது அந்த இடம் உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள நகாஸ் சாலை என்பது உறுதியானது.

முடிவு :
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை, வக்ஃப் மசோதா எதிர்ப்பாளர்கள் மீது நடந்த தடியடி சம்பவம் என்று தவறாகப் பகிரப்படுகிறது.