YouTurn

மக்களவையில் அமித்ஷாவை மிரட்டிய எம்.பி. காகோலி கோஷ் தாஸ்டிதர் எனப் பரவும் போலி வீடியோ!

மக்களவையில் அமித்ஷாவை மிரட்டிய எம்.பி. காகோலி கோஷ் தாஸ்டிதர் எனப் பரவும் போலி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மேற்குவங்கத்தை சேர்ந்த எம்பி காகோலி கோஷ் தாஸ்டிதர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டுவதாகப் பரவும் வீடியோ உண்மையானது அல்ல. நாடாளுமன்றத்தின் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளின் வீடியோவை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

திருமதி காகோலி கோஷ் MP அமித்ஷாவை மிரட்டுகிறார். நீ உக்காரு! உனக்கு என்ன தெரியும்? நின்னுக்கிட்டே இருக்கே. நான் சொல்றேன்ல, உனக்கு ஒன்னுந் தெரியாது.பெட்ரோல்₹100 ஐ தாண்டிட்டு. விலைவாசி கன்னா பின்னா ஏறிடுச்சு. ஏழைகள் எப்படி சோறு திம்பாங்க யோசிச்சியா? எல்லாத்துக்கும் GST போடுறே..


X Link | Archive Link

விரிவான விளக்கம்

மேற்குவங்கத்தை சேர்ந்த எம்பி காகோலி கோஷ் தாஸ்டிதர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டுவதாகக் கூறி 41 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் அதில், காகோலி கோஷ் MP, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நோக்கி “நீ உட்காரு! உனக்கு என்ன தெரியும்? நின்றுகொண்டே இருக்கிறாயே. நான் சொல்கிறேன்ல, உனக்கு ஒன்றும் தெரியாது. பெட்ரோல் ₹100 ஐ தாண்டி விட்டது. விலைவாசி கன்னா பின்னா என்று ஏறிவிட்டது. ஏழைகள் எப்படி சோறு சாப்பிடுவார்கள் என்று யோசித்தீர்களா? எல்லாவற்றிற்கும் GST போடுகிறீர்கள்” என்று கூறுவதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 




உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது எடிட் செய்யப்பட வீடியோ என்பதை அறிய முடிகிறது.


சரியாக வீடியோவின் 03-வது வினாடியில் அமித்ஷா சாம்பல் நிற ஆடையையும், 22-வது வினாடியில் நீல நிற ஆடையையும் அணிந்திருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. இதன் மூலம்  நாடாளுமன்றத்தின் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளின் வீடியோவை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 



இருப்பினும் இது போலி வீடியோ என்பதை மேலும் உறுதிபடுத்த, இந்த இரண்டு வெவ்வேறு நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்து தேடினோம். 


அதில், MP காகோலி கோஷ் எதிரே உள்ளவரை அமரச் சொல்லும் காட்சி, சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 1, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அவ்வீடியோவின் 12:35 வது நிமிடங்களில் உள்ள காட்சி பரவி வரும் வீடியோவோடு பொருந்துவதைக் காண முடிகிறது. ஆனால் இந்த வீடியோவின் எந்த இடத்திலும் அமித்ஷா குறித்து காட்டப்படவில்லை. 



இதே போன்று, பரவி வரும் வீடியோவில் அமித்ஷா அமருவது போன்று உள்ள காட்சி, சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில் பிப்ரவரி 7, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்த வீடியோவின் 03:41 வது நிமிடங்களில் சரியாகப் பொருந்துகிறது. 



இதன் மூலம் சமூக ஊடகங்களில் MP காகோலி கோஷ் குறித்து தற்போது பரவும் வீடியோ கடந்த 2022-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், நாடாளுமன்றத்தின் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளின் வீடியோவை எடிட் செய்து இதை தவறாகவும் பரப்பி வருகின்றனர் என்பதையும் உறுதிபடுத்த முடிகிறது.


முடிவு: 


நம் தேடலில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.காகோலி கோஷ் தாஸ்டிதர் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் மிரட்டுவதாகப் பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.